குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் குஜராத் மாநிலத்தில் பாஜக அமோக வெற்றி பெற்று 7ஆவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. அதேபோல், இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி பாஜக ஆட்சியை வீழ்த்தி மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரவுள்ளது.
இந்த இரு மாநில தேர்தல் மட்டுமல்லாது உத்தரப் பிரதேசம், பீகார், ஒடிசா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது. இவற்றின் முடிவுகளும் நேற்று அறிவிக்கப்பட்டது. அதன் முழு விவரம் இதோ.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சரான முலாயம் சிங் யாதவ் மறைவை அடுத்து அவரின் சொந்த தொகுதியான மைன்பூரி தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதில் முலாயமின் சமாஜ்வாதி கட்சி சார்பாக முலாயம் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராகுராஜ் சிங்கை விட சுமார் 2.88 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதேபோல், அம்மாநிலத்தின் கதவ்லி தொகுதி இடைத் தேர்தலில், ஆளும் பாஜக வேட்பாளர் ராஜ்குமாரியை ராஷ்டிரிய லோக் தள் வேட்பாளர் மதன் பையா 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
உபியின் இரு தொகுதியில் பாஜக தோற்றாலும், ராம்பூர் தொகுதியில் வெற்றிபெற்றது அக்கட்சிக்கு ஆறுதலான செய்தியாக உள்ளது. இந்த தொகுதி சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான அசாம் கான்னுடைய கோட்டையாகும். சுமார் 20 ஆண்டுகளாக அசாம் கானும் அவரது குடும்பத்தினரும் தான் இந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த நிலையில், தற்போது இதில் பாஜக வேட்பாளர் ஆகாஷ் சக்சேனா சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல், பீகார் மாநிலத்தின் குர்ஹானி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அங்கு ஆட்சியில் உள்ள மெகா கூட்டணி வேட்பாளர் மனோஜ் குஷ்வாஹாவை 3,632 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கேதர் பிரசாத் குப்தா வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: குஜராத் தேர்தலில் வெற்றி கணக்கை தொடங்கிய ஆம் ஆத்மி.. தேசிய கட்சி அந்தஸ்து பெற வாய்ப்பு
அதேபோல் ஒடிசாவின் பதாம்பூரில் ஆளும் பீஜு ஜனதாதளம் வேட்பாளர் பர்ஷா சிங் 42,679 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பிரதீப் புரோஹித்தை வீழ்த்தியுள்ளார்.ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தலிலும் அங்கு ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி பாஜக வேட்பாளரை வீழ்த்தியுள்ளது. ராஜஸ்தான் சதார்ஷஹர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அனில் குமார் சர்மா 26,000 வாக்குகள் வித்தியாசத்திலும், சத்தீஸ்கர் பானுபிரதாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சாவித்ரி மனோஜ் 21,000 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.