2019 கொடூர தாக்குதல் போல மீண்டும் நடத்த திட்டம்? - புல்வாமாவில் வெடிபொருட்களுடன் பிடிபட்ட கார்

2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் பயங்கரமான தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

காஷ்மீரில் 40 வீரர்களை பலிகொண்ட புல்வாமா தாக்குதலை போல, மற்றொரு கொடூர தாக்குதலை நடத்தும் பயங்கரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  காஷ்மீரின் புல்வாமாவாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் ஒன்றை நடத்தினர்.  இதில் 40 வீரர்கள் வீரமரணம் எய்தியதுடன், 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர். கார் ஒன்றில் சக்திவாய்ந்த வெடிபொருட்களை நிரப்பி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் ஜெய்ஷ் இ மொகமது அமைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் துல்லியத்தாக்குதல் நடத்தி, ஜெய்ஷ் இ மொகமது அமைப்பின் முகாம்களை அழித்தது.

  இதேபோன்ற மற்றொரு தாக்குதல் நடத்தும் திட்டம் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட உள்ளதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து புல்வாமா மாவட்டம் ராஜ்போரா பகுதியில் காஷ்மீர் காவல்துறையினர், ராணுவ மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

  அப்போது அவ்வழியாக சென்ற கார் ஒன்று சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகமடைந்த பாதுகாப்பு படையினர், காரை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதையடுத்து காரை நிறுத்தி விட்டு, ஓட்டுநர் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. காரை அதிகாரிகள் சோதனையிட்ட போது, சுமார் 45 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதி மக்களை வெளியேற்றிய பாதுகாப்புப்படையினர், காரில் இருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்தனர்.

  வெடிபொருட்களை ஏற்றி வந்த காரின் பதிவு எண், இருசக்கர வாகனத்தின் எண் எனத் தெரியவந்துள்ளது. வெடிபொருட்கள் நிரப்பட்ட வாகனத்தை, பாதுகாப்பு வீரர்கள் மீது மோதி வெடிக்கச் செய்வதே திட்டமாக இருந்துள்ளது. இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு உள்ளதாகவும், அவர்களுக்கு ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு உதவியுள்ளதாகவும் காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி. விஜயகுமார் கூறியுள்ளார். இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Sankar
  First published: