Home /News /national /

புல்வாமா தாக்குதல் முதல் நாட்டை அதிரவைக்கும் CAA எதிர்ப்பு போராட்டம் வரை! இந்திய நிகழ்வுகள் ஒரு அலசல்

புல்வாமா தாக்குதல் முதல் நாட்டை அதிரவைக்கும் CAA எதிர்ப்பு போராட்டம் வரை! இந்திய நிகழ்வுகள் ஒரு அலசல்

(Image: AP)

(Image: AP)

  • News18
  • Last Updated :
    மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் இந்த ஆண்டு தொடங்கியிருக்கும். இந்த ஆண்டு இந்திய மக்கள் பலருக்கும் எதிர்பாரத அரிய நிகழ்வுகள் அமைந்த ஆண்டாகவே இந்த ஆண்டு இருந்திருக்கும். அப்படி அமைந்த இந்த ஆண்டில் இந்திய அளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் குறித்து பார்ப்போம்.

    புல்வாமா தாக்குதல்: இந்த ஆண்டின் தொடக்கமே மிக மோசமான ஆண்டாக இந்தியாவுக்கு அமைந்தது. இந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற விமானத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 உயரிழந்தனர்.



    இந்தச் சம்பவம் நாட்டை உலுக்கி எடுத்தது. இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய தீவிரவாதத் தாக்குதலாக இந்தச் சம்பவம் வரலாற்றில் இடம்பிடித்தது.



    பாலகோட் தாக்குதல்: புல்வாமா பகுதியில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தானில் பாலகோட் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலில் பாகிஸ்தானிலிருந்த 200 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், பாகிஸ்தான் தரப்பில் உயிரிழப்பு ஏதும் நடைபெறவில்லை என்று விளக்கமளித்தனர். இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் மிகப் பெரிய பாராட்டைப் பெற்றுத்தந்தது.

    அபிநந்தன் வர்த்தமான் விடுதலை: பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பதில் தாக்குதலாக பாகிஸ்தான் விமானப் படை இந்திய எல்லைக்குள் நுழைந்தது. அந்த விமானத்துக்கு பதிலடி கொடுத்த தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார்.

    விடுதலை செய்யப்படும் அபிநந்தன்


    அவர், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய நிலையில், அது உலக அரங்கில் மிகப் பெரும் பேசு பொருளானது. இரு நாட்டுக்கு இடையே போர் ஏற்படும் பதற்றம் ஏற்பட்டது. பின்னர், இந்தியா மேற்கொண்ட முயற்சியின் காரணமாக மார்ச் 1-ம் தேதி அபிநந்தன் வர்த்தமான், இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகா பகுதியில் வைத்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அபிநந்தன் வர்த்தமானை இந்தியா முழுவதும் கொண்டாடித் தீர்த்தனர். அவருடைய மீசை எல்லைக்களைக் கடந்து நாடு முழுவதும் பிரபலமடைந்தது.

    மோடி 2.0: நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் மே 23-ம் தேதி வெளியானது. நாடு முழுவதும் பா.ஜ.க மீதும், மோடி மீதும் எதிர்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்திருந்தநிலையிலும் தேர்வு முடிவுகள் வேறாக இருந்தது. பா.ஜ.க மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. பா.ஜ.க 303 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயக கூட்டணி 353 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.



    காங்கிரஸ் கட்சி மிகப் பெரும் தோல்வியைச் சந்தித்தது. மொத்தமாக 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதில், தமிழகத்தில் 9 தொகுதிகளையும், கேரளாவில் 18 தொகுதிகளையும் காங்கிரஸ் வென்றிருந்தது. மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது. தோல்வியின் உச்சமாக ராகுல் காந்தி போட்டியிட்ட அவர் குடும்ப ஆஸ்தான தொகுதியான அமேதியில் அவரை ஸ்மிருதி இராணி தோற்கடித்தார். இப்படியாக, நாடாளுமன்றத் தேர்தல் மூலம் பா.ஜ.கவின் நாடு முழுவதும் மீண்டும் வலுவாக ஒலித்தது.

    சந்திரயான்-2: சந்திரயான்-2 விண்கலம் இந்த ஆண்டு ஜூலை 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-2 என்பது மூன்று பகுதிகளை உடைய ஒரு விண்கலத் தொகுப்பு. இதில், நிலவை சுற்றி வரும் கலன் ஒன்றும், நிலவில் தரையிறங்கும் கலன் ஒன்றும், நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும் ரோவர் ஒன்றும் இருக்கும்.

    சந்திராயன் 2


    தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில் தோல்வியைத் தழுவியது இஸ்ரோ. இருப்பினும், உலக அளவில் மிகப்பெரும் கவனத்தை ஈர்த்த சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியதற்காக இஸ்ரோவுக்கு ஒவ்வொரு இந்தியரும் தோளோடு தோல் நின்றது உருக்கமான நிகழ்வாக வரலாற்றில் பதிவாகியுள்ளது.


    விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில் பின்னடைவைச் சந்தித்து குறித்து உடைந்தழுத சிவனுக்கு மோடி ஆறுதல் சொல்லி காட்சிகள் கல்நெஞ்சு கொண்டவர்கள் மனதையும் கரைக்கும் நிகழ்வாக இருந்தது. சந்திரயான்-2 திட்டத்தை முன்னின்று வழிநடத்தியது தமிழகத்தைச் சேர்ந்த சிவன் என்பது நமக்கு கூடுதல் சிறப்பு.

    கர்நாடக அரசு கவிழ்ப்பு: கர்நாடகாவில், காங்கிரஸ், மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி நடைபெற்றுவந்தது. பா.ஜ.க 100 தொகுதிகளுக்கு மேல் வெற்றி தனிப் பெரும் கட்சியாக இருந்தது. இந்தநிலையில், காங்கிரஸ், மதச்சார்பற்ற கட்சிகளைச் சேர்ந்த 17 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்வதாக அப்போதைய அம்மாநில சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர்.



    பின்னர், எம்.எல்.ஏக்கள் 17 பேரும் மும்பையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் அடைத்துவைக்கப்பட்டனர். அதனையடுத்து, குமாரசுவாமி அரசு பெரும்பான்மையை நிருபிக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. 17 பேரை உடன் அழைத்துச் செல்வதற்கு அப்போதைய கர்நாடக அமைச்சர் சிவகுமார் மும்பை சென்று ஹோட்டலின் முன்பு மழையில் நின்றார். இருப்பினும், எம்.எல்.ஏக்கள் திரும்பி வரவில்லை. இறுதியில், பெரும்பான்மையை நிருபிக்க முடியாமல் ஆட்சியை இழந்தார் குமாரசுவாமி. ஜூலை 23-ம் தேதி தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். அதன்பிறகு, எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைந்தது.


    காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து:
    சுதந்திரமடைந்த பிறகு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததிலிருந்து அம்மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் வெளிமாநிலத்தவர்கள் யாரும் நில வாங்க முடியாது உள்ளிட்ட உரிமைகள் அம்மாநிலத்துக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது வழங்கியது. பா.ஜ.க இரண்டாது முறையாக ஆட்சியமைத்த சில மாதத்திலேயே காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை குடியரசுத் தலைவர் உத்தரவின் மூலம் நீக்கினார்கள்.



    ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதாக மாநிலங்களவையில் அறிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து நாடாளுமன்றத்தில் சட்டமியற்றினர். அதனையடுத்து, காஷ்மீர் மாநிலம் முழுவதும் ராணுவக் கட்டுப்பாட்டுக் கொண்டுவரப்பட்டது. மாநிலத்தில் தொலை தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன.



    மாநிலத்தின் முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தற்போது வரை அவர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இன்றுவரை தொலைதொடர்பு சேவைகள் முழுவதுமாக வழங்கப்படவில்லை. இந்த விவகாரம் இந்திய எல்லைகளைக் கடந்து உலக அரங்கிலும் எதிரொலித்தது.

    ப.சிதம்பரம் கைது: ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் ஆகஸ்ட் 21-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்துவிட்டது. அதனையடுத்து, அவரைக் கைது செய்யும் முயற்சியில் சி.பி.ஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.



    ப.சிதம்பரம் தலைமறைவாகிவிட்டார் என்பது போன்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதனையடுத்து, டெல்லியிலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். பின்னர், டெல்லியின் ஜோர்பாக் பகுதியில் அமைந்ந்துள்ள இல்லத்துக்குச் சென்றார். அவருடைய வீட்டில் சுவர் ஏறிக் குதித்து ப.சிதம்பரத்தைக் கைது செய்தனர் சி.பி.ஐ அதிகாரிகள். இந்தச் சம்பவம் இந்திய அளவில் பரபரபரப்பை ஏற்படுத்தியது.

     

    அயோத்தி தீர்ப்பு: சுதந்திர இந்திய வரலாற்றில் மிக நீண்ட கால சர்ச்சைக்குரிய வழக்குகளில் முக்கியமானது பாபர் மசூதி அமைந்துள்ள அயோத்தி நிலப் பங்கீடு தொடர்பான வழக்கு. அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சுமார் 9 ஆண்டுகள் கழித்து நவம்பர் 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

     



    தீர்ப்பில், சர்ச்சைக்குரிய இடம் குழந்தை ராமருக்கு சொந்தம் என்றும் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக எந்த கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தீர்ப்பு குறித்து விமர்சனம் செய்திருந்தார். இந்த அயோத்தி இந்திய அளவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

    மகாராஷ்டிரா அரசு உருவாக்கம்: மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24-ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்தல் முடிவில் பா.ஜ.க 106 தொகுதிகளிலும், காங்கிரஸ் 44 தொகுதிகளிலும், சிவசேனா 57 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் 54 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுக்கு எதிர்பாரத விதமாக பா.ஜ.க ஆட்சியமைக்க ஆதரவு தருவதற்கு சிவசேனா மறுப்பு தெரிவித்தது.



    முதல்வர் பதவியும் கேட்டு பா.ஜ.கவுக்கு நெருக்கடி கொடுத்தது சிவசேனா. அதனால், மகாராஷ்டிரா அரசியல் தேசிய தலைப்புச் செய்திகளாக தொடர்ந்து இடம் பிடித்தது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளுக்குள் உடன்பாடு ஏற்பட்டது. அதனையடுத்து, இந்தக் கூட்டணி சார்பில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்பார் என்று நவம்பர் 24-ம் தேதி செய்தித்தாள்கள் முழுவதும் செய்திகள் வெளியாகியிருந்தன.

    உத்தவ் தாக்கரே


    ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக அன்றைய நாள் அதிகாலையில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவாரின் ஆதரவுடன் தேவேந்திரநாத் பட்னவிஸ் மீண்டும் முதல்வராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா அரசியல்களம் சூடுபிடித்தது. பின்னர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் ஒற்றுமையாக இருந்து தேவேந்திரநாத் பட்னவிஸை பதவியிலிருந்து இறக்கி கூட்டணி ஆட்சி அமைத்து சாதித்தனர்.

    ஹைதராபாத் பாலியல் வன்கொடுமை& நால்வர் என்கவுண்டர்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டத்தில் நவம்பர் 27-ம் தேதி கால்நடை மருத்துவரை நால்வர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்தனர். அந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரும் டிசம்பர் 4-ம் தேதி காவல்துறையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். அவர்கள் நால்வரும் காவல்துறையினரைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சி செய்ததாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. நான்கு பேரும் என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தாலும், மனித உரிமை ஆர்வலர்கள் இந்தச் சம்பவத்து கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

    குடியுரிமைத் திருத்தச் சட்டம்: பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள இஸ்லாம் மதத்தைத் தவிர்த்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்த மசோதா இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் டிசம்பர் 12 தேதி சட்டமானது. அதனைத் தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.



    மேற்கு வங்க, கேரளா மாநில முதல்வர்கள் இச்சட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தொடங்கிவைத்த போராட்டம் நாடு முழுவதும் ஒலித்துக் கொண்டே உள்ளது.



    CAA-வுக்கு எதிரான போராட்டத்துடனேயே 2020-ம் ஆண்டு மலரவுள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற மிகப் பெரிய தீவிரப் போராட்டமாக குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரானப் போராட்டம் பதிவாகியுள்ளது. இந்தப் போராட்டத்துக்கு எதிரானப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25-யைக் கடந்துள்ளது வருத்தமான செய்தியாகும்.
    Published by:Karthick S
    First published:

    Tags: YearEnder 2019

    அடுத்த செய்தி