பீகார் மாநிலம் பாட்னாவில் இந்திய தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழ்வாய்வு பணிகள் பட்னா அருகே உள்ள கும்ரஹார் என்ற பகுதியில் நடைபெற்று வருகின்றது.
இந்த ஆய்வின் போது 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த செங்கல் சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை இந்திய தொல்லியல் துறையின் பாட்னா வட்ட கண்காணிப்பாளர் கவுதமி பட்டாச்சாரியா தெரிவித்துள்ளார். அங்குள்ள புராதன ஏரியை சீரமைக்கும் பணியில் தொல்லியல் துறை ஈடுபட்ட போது எதார்த்தமாக இந்த கல் சுவர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கல்சுவர் 2000 ஆண்டு பழமை வாய்ந்த மவுரிய பேரரசு அல்லது குஷான் பேரரசு காலத்தை சேர்ந்தவை என முதல் கட்ட ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது. இது தொடர்பாக டெல்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறை தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு விரிவான ஆய்வு நடத்த தொல்லியல் துறை தலைமை அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே இந்த பகுதியானது மிஷன் அமரித் சரோவர் என்ற திட்டத்தின் கீழ் தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளது.
இது தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரி கவுதமி கூறுகையில், இந்த ஏரிப் பகுதியில் பழமை வாய்ந்த செங்கல் சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதுள்ளது ஆச்சரியத்தை தந்துள்ளது. இது முக்கியமான சின்னமாகும். மவுரிய அல்லது குஷான் காலத்து சின்னம் இது. குஷான் பேரரசு இந்திய துணைக் கண்டத்தின் வடக்கு பகுதி மட்டுமல்லாது, ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய பகுதியையும் ஆண்டவர்கள். எனவே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சின்னம் குறித்து தொல்லியல் துறை விரிவான ஆய்வு மேற்கொள்ளும் என்றார்.
இதையும் படிங்க:
மனைவியுடன் இயற்கைக்கு மாறாக உடலுறவு.. அந்தரங்க புகைப்படங்களை பகிர்ந்த கொடுமை - ஐஐடி பட்டதாரி மீது மனைவி புகார்
ஏற்கனவே கடந்த மாதம் பீகாரில் உள்ள மவுரிய மற்றும் குப்தர்களின் காலத்தில் உருவாக்கப்பட்ட நினைவு சின்னங்களை பட்டியலிட்டு யுனெஸ்கோ அமைப்பின் தொன்மையான சின்னம் பட்டியலில் இடம்பெற செய்ய தொல்லியல் துறை தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. இதற்காக வைஷாலி, சம்பாரன், முசாபர்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள புராதன சின்னங்களை தொல்லியல் துறை கவனம் கொண்டு அறிக்கை தயாரித்து வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.