5 பேரின் உயிரைக் காப்பாற்றிய 20 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம் - காஷ்மீரில் நெகிழ்ச்சி சம்பவம்

காட்சி புகைப்படம்

டெல்லியில் முளைச்சாவு அடைந்த 20 மாதக் குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, உயிருக்கு போராடிய 5 பேருக்கு வாழ்வளிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
காஷ்மீர் பகுதியில் ஆஷிஸ்குமார் - பபிதா தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்களின் 20 மாதக் குழந்தை தனிஷ்க்தா, ஜனவரி 8 ஆம் தேதி வீட்டின் மாடிப்படிக்கட்டில் இருந்து தவறி விழுந்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த குழந்தையை ஆஷிஸ் குமார் தம்பதியினர் அருகில் இருந்த கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர். பலத்த காயம் மற்றும் அதிர்ச்சி காரணமாக ஜனவரி 11 ஆம் தேதி குழந்தையின் மூளை செயலிழந்துவிட்டது.

இதனை மருத்துவர்கள் குழந்தையின் பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். தங்கள் குழந்தை மீண்டுவர வாய்ப்பில்லை என உணர்ந்த பெற்றோர், கடினமான சூழ்நிலையிலும் தனிஷ்க்தாவின் உடல் உறுப்புகளை மற்ற குழந்தைகளுக்கு தானம் செய்ய முன்வந்தனர். தனிஷ்க்தாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்தபோது, மற்ற குழந்தைகளின் பாதிப்பும் அவர்களை பாதித்துள்ளது. உடல் உறுப்புகளை யாராவது கொடையாக கொடுத்தால் அந்தக் குழந்தைகள் பிழைத்துவிடுவார்கள் என்ற தகவலை அறித்த ஆஷிஸ்குமார் தம்பதி, தாங்களாகவே தங்கள் குழந்தையின் உறுப்புகளை அந்த குழந்தைகளுக்கு கொடையாக அளிக்க முடிவு செய்தனர்.

குழந்தையின் உடலில் இருந்து இதயம் ஈரல் இரண்டு சிறுநீரகங்கள் இரண்டு கண்களில் உள்ள விழித்திரை ஆகியவை எடுக்கப்பட்டன. குழந்தையின் இதயமும் ஈரலும் இரண்டு குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டன.  சிறுநீரகங்கள் ஒரு முதியவருக்கு பொருத்தப்பட்டது. விழித்திரை மட்டும் மருத்துவமனையின் உறுப்பு வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய குழந்தையின் தந்தை தனிஷ்க்தாவின் தந்தை ஆஷிஸ்குமார்," எங்களுக்கு ஏற்பட்ட இந்த நிகழ்வு நினைத்துக்கூட பார்க்க முடியாதது. 20 மாதக் கைக்குழந்தை தனிஷ்கதா எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து மூளைச்சாவு அடைந்துள்ளார். இதனை மருத்துவர்கள் எங்களிடம் தெரிவித்தபோது நாங்கள் வேதனையின் உச்சக்கட்டத்துக்கு சென்றுவிட்டோம். இருப்பினும், மருந்துவமனையில் மற்ற குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பும் எங்களை மிகவும் பாதித்துவிட்டது. எங்கள் குழந்தையின் உடல்உறுப்புகளை தானம் செய்வது என முடிவு செய்து மருத்துவர்களிடம் கேட்டோம். அவர்களுக்கு அதற்கு சம்மதம் தெரிவித்தனர். எங்கள் குழந்தையின் உடல் உறுப்பு கொடையால் தற்போது 5 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது" என்றார்.

கங்காராம் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டாக்டர் டி.எஸ்.ராணா பேசும்போது, குழந்தையின் உடல்உறுப்புகளை தானம் செய்த ஆஷிஸ்குமார் தம்பதியின் செயல் மிகவும் பாராட்டத்தக்க செயல் என்றார். மேலும், இறந்தவர் உடலில் உள்ள உறுப்புகளை தானம் செய்து மற்ற நோயாளிகளுக்கு பயன்படுத்துவது இந்தியாவில் மிகவும் குறைவாகவே உள்ளது என கூறிய அவர், 20 முதல் 30 சதவீத இறந்தவர்களின் உடல் உறுப்புக்கள் மட்டும்தான் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார். ஆண்டு ஒன்றுக்கு 5 லட்சம் இந்தியர்கள் இறப்பதாகவும், அதில் 26 ஆயிரம் பேரின் உடல் உறுப்புகள் மட்டுமே கொடையாக வழங்கப்படுவதாக தெரிவித்த டாக்டர் ராணா, வட மாநிலங்களை ஒப்பிடுகையில் தென் மாநிலங்களில் உடல் உறுப்பு தானம் அதிகமாக இருப்பதாகவும் கூறினார். உடல் உறுப்புதானம் என்பது மிகச்சிறந்த ஒரு கொடை எனக் குறிப்பிட்ட அவர், அதனை அனைவரும் செய்ய முன்வரவேண்டும் என தெரிவித்தார். தனிஷ்க்தாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவிலேயே மிக இளம் வயது உடல் உறுப்பு கொடையாளர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.
Published by:Tamilmalar Natarajan
First published: