தன்னுயிரை இழந்தும் 5 பேருக்கு வாழ்வளித்த கைக்குழந்தை!

தன்னுயிரை இழந்தும் 5 பேருக்கு வாழ்வளித்த கைக்குழந்தை!

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 5 பேருக்கு உறுப்புகளை தானமாக அளித்து இந்தியாவின் குறைந்த வயது உறுப்பு நன்கொடையாளராக மாறியிருக்கிறாள் பேபி தனிஷ்தா.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 5 பேருக்கு உறுப்புகளை தானமாக அளித்து இந்தியாவின் குறைந்த வயது உறுப்பு நன்கொடையாளராக மாறியிருக்கிறாள் பேபி தனிஷ்தா.

  • Share this:
உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 பேருக்கு உறுப்புகளை தானமாக அளித்து இந்தியாவின் குறைந்த வயது 'உறுப்பு நன்கொடையாளர்' ஆக மாறியிருக்கிறாள் பேபி தனிஷ்தா.

டெல்லியைச் சேர்ந்த 39 வயதாகும் ஆஷிஷ் குமார் மற்றும் அவரின் மனைவி பபிதா தம்பதியர் தங்களது மகளின் 2வது பிறந்த நாளை கொண்டாட ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் கடந்த வாரம் வீட்டின் பால்கனியில் இருந்து விழுந்த அவர்களின் குழந்தை உயிரிழந்த போது உலகமே நொறுங்கியதை போல இருந்தது அந்த தம்பதியினருக்கு.

இருப்பினும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 மாத குழந்தை உள்ளிட்ட 5 பேருக்கு தங்கள் மகள் இறந்தும் வாழ்வளித்திருக்கிறாள் என்பது அவர்களுக்கு சிறிது நிம்மதியை தந்திருக்கும்.

கடந்த ஜனவரி 8ம் தேதியன்று முதல் தளத்தில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் குழந்தை தனிஷ்தா விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்து கீழே விழுந்து சுயநினைவின்றி மயங்கியது. அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதிக்கப்பட்ட குழந்தை தனிஷ்தாவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் அவரின் சுயநினைவு திரும்பாமலே போனது. இதன் பின்னர் ஜனவரி 11ம் தேதி அவர் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

குழந்தை இறந்த சோகத்திலும் கூட அவரின் உறுப்புகளை தானம் அளிக்க அவரின் பெற்றோர் முடிவு செய்தனர். மருத்துவமனையில் தங்கியிருந்த போது பிற நோயாளிகளின் நிலையை அறிந்து தாமாகவே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

குழந்தை தனிஷ்தாவின் இதயம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 மாத குழந்தைக்கு பொருத்தப்பட்டுள்ளது. அவரின் சிறுநீரகம் உள்ளிட்ட பிற உறுப்புகளும் உயிருக்காக போராடிய 4 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குழந்தையின் தந்தை ஆஷிஷ் குமார் கூறுகையில், மருத்துவமனையில் நாங்கள் தங்கியிருந்த போது பல நோயாளிகளும் மரணமடைந்ததை பார்த்தோம், மருத்துவர்களிடம் கேட்ட போது உறுப்புகள் கிடைக்காததால் அவர்கள் மரணத்தை தழுவியிருப்பதாக கூறினார்கள். எங்களின் குழந்தைக்கு மீண்டும் வாழ்க்கை கிடைக்காது என்பதை உணர்ந்தே அவரின் உறுப்புகளை தானம் அளிக்க முடிவு செய்தோம்.

ஏற்கனவே எங்கள் குழந்தையை நாங்கள் இழந்துவிட்டோம். பிறருக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது, இதனை மருத்துவர்களிடம் தெரிவித்தோம். என் குழந்தை என்னிடம் இல்லாமல் போகலாம் ஆனால் அவரின் உறுப்புகளுடன் பிறர் உயிர் வாழ்வதையாவது பார்க்கலாம்.

இதன் காரணமாக எனது வலி நீங்கிவிடாது, இருப்பினும் பிறரின் வாழ்க்கைக்கு என் மகள் காரணமாக இருந்திருக்கிறாள் என இதன் மூலம் அவளை நினைவு கூற முடியும்.. இந்த பெருமை எனது வலியை நீக்கும் என அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக குழந்தையின் பெற்றோரை பாராட்டிய மருத்துவர்கள், உறுப்பு தானத்தில் உலகிலேயே மிகவும் குறைந்தபட்சமாக மில்லியனில் 0.26 என்ற அளவில் இந்தியா உள்ளது. ஆண்டொன்றிற்கு சராசரியாக 5 லட்சம் இந்தியர்கள் உறுப்புகள் கிடைக்காமல் உயிரிழப்பதாக மருத்துவமனையின் தலைவர் ரானா கூறியது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: