பத்திரிகையாளர்களை அழைத்து, வீடியோ எடுக்கச்சொல்லி என்கவுன்டர் செய்த போலீஸ்!

மாதிரிப் படம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  உத்தரப் பிரதேச மாநிலத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று நடந்த போலீஸ் என்கவுன்டரில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

  இதுதொடர்பாக, அலிகர் காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் சாஹ்னி கூறியதாவது: அலிகாரில் இன்று காலை சந்தேகத்துக்கிடமான வகையில் 2 பேர் பைக்கில் வேகமாகச் சென்றனர். அங்கிருந்த போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றபோது, அவர்கள் போலீஸாரை துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, போலீஸார் அவர்களை விடாமல் துரத்திச் சென்றனர். எனினும், அவர்கள் ஓரிடத்தில் இறங்கி ஒதுக்குப்புறமான கட்டிடத்துக்குள் பதுங்கினர்.

  பின்னர் அவர்கள் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு போலீஸாரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.

  உயிரிழந்த இருவரும் கடந்த மாதம் நடைபெற்ற 6 கொலை சம்பவங்களில் தொடர்புடையவர்கள். முன்னதாக, இந்தச் சம்பவத்தை நேரில் பார்க்க பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்படி, பத்திரிகையாளர்கள் அங்கு நேரில் வந்தனர் என்றார் அஜய் சாஹ்னி.

  உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பொறுப்பேற்றது. அதுமுதல், தற்போதுவரை 66 பேர், போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், நூற்றுக்கணக்கான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  இதுதொடர்பாக, உத்தரப் பிரதேச மாநில காவல்துறை தலைவர் ஓ.பி.சிங் கூறியதாவது: என்கவுன்டர் என்பது குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பிரிவாகும். உண்மையில், இதில் அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை. இது போலீஸார் வகுக்கும் வியூகமாகும்.

  புதிய அரசு பொறுப்பேற்ற பின் நடந்த என்கவுன்டர் சம்பவங்களில் குற்றவாளிகளின் பதில் தாக்குதல் காரணமாக 4 போலீஸார் உயிரிழந்தனர்; 500-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் என்றார் ஓ.பி.சிங்.
  Published by:DS Gopinath
  First published: