வன்முறைக் களமான டெல்லி: 18-ஆக உயர்ந்தது உயிரிழப்பு எண்ணிக்கை..!

டெல்லி கலவரம்

 • Share this:
  சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் தலை நகர் டெல்லி வன்முறைக் களமாக காட்சியளிக்கிறது. வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்ட நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது.

  வடகிழக்கு டெல்லியில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. ஜாஃப்ராபாத், மவ்ஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக், கர்தம்பூரி, தயால்பூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மூன்றாவது நாளாக நேற்றும் வன்முறை நீடித்தது. யமுனா விஹார், கோகுல்புரி, ஜோக்ரி என்கிளேவ், ஷிவ் விஹார் ஆகிய இடங்களில் நடைபெற்ற வன்முறையில் இரு குழுக்களும் கற்கள், பாட்டில்களை வீசிக் தாக்கிக் கொண்டனர்.மேலும், வாகனங்களுக்கு தீ வைப்பதும், பெட்ரோல் நிலையங்களைக் கொளுத்துவதும், வீடு புகுந்து தாக்குவதும் என கட்டுகடங்காத வன்முறையாக மாறியது.

  வன்முறை நடந்த இடங்களுக்குச் சென்ற டெல்லி போலீசாரும், மத்திய பாதுகாப்புப் படையினரும் கலவரத்தில் ஈடுபட்ட கும்பலை தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனர்.

  கோகுல்புரியில் வன்முறையாளர்களை விரட்ட முயன்ற மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் மீது கும்பல் ஒன்று ஆசிட் வீசி தாக்கியது. படுகாயமடைந்த வீரர்கள் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

  இதனிடையே, வன்முறையின்போது முனா விஹாரில் பள்ளி மாணவியர்களை பொதுமக்கள் மனிதச் சங்கிலி அமைத்து அழைத்துச் சென்ற வீடியோ பகிரப்பட்டு வருகின்றன.

  ஜாஃப்ராபாத், மெளஜ்பூர், பஜன்புரா, சந்த்பாக், கர்தம்பூரி ஆகிய இடங்களில் இரவிலும் ஆங்காங்கே கல்வீச்சும், வாகனங்களுக்கு தீ வைப்பு சம்பவங்களும் தொடர்ந்தன.

  வன்முறையின்போது, யமுனா விஹார், ஜாஃப்ராபாத், மெளஜ்பூர் ஆகிய இடங்களில் கடைக்குள் புகுந்து சிலர் அங்கிருந்த பொருட்களைத் திருடிச் சென்றனர்.

  வன்முறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 13-ஆக அதிகரித்துள்ளது. படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், பைத்தியக்காரத்தனமான வேலையை கைவிட்டு அமைதி நிலைநாட்ட ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

  இதைத் தொடர்ந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர வடகிழக்கு டெல்லியின் மெளஜ்பூர், ஜாஃப்ராபாத், சந்த்பாக், கர்வால் நகர் ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்துவதற்கு வன்முறையாளர்களைக் கண்டதும் சுட காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  ஆங்காங்கே அதிவிரைவுப் படையினர் நடந்து சென்றும், இருசக்கர வாகனங்களில் சென்றும் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

  வன்முறையைக் கட்டுப்படுத்துவது குறித்து மூன்றாவது முறையாக நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, டெல்லியில் சட்டம் ஒழுங்கைக் கவனிக்க சிறப்பு காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிகளுக்கு 2-வது நாளாக இன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 86 மையங்களில் அரசுப் பள்ளி மற்றும் சிபிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைக்க துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா அறிவுறுத்தியுள்ளார்.

  இதற்கிடையே, டெல்லி இந்தியா கேட் முன்பு திரண்ட மாணவர்கள், இளைஞர்கள், வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு மெகுழுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். தங்களை மத ரீதியாக பிரிக்க வேண்டாம், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி முழக்கமிட்டனர்.
  Published by:Rizwan
  First published: