17-வது மக்களவையின் முதல் கூட்டம் இன்று தொடக்கம் - புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு

ஜுலை 5 ஆம் தேதி நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

17-வது மக்களவையின் முதல் கூட்டம் இன்று தொடக்கம் - புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு
நாடாளுமன்றம்
  • News18
  • Last Updated: June 17, 2019, 7:29 AM IST
  • Share this:
17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதையொட்டி நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மக்களவை தேர்தலில் பாஜக பிரமாண்ட வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளதை அடுத்து, 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்றும் நாளையும் மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எம்பிக்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள்.

அவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள வீரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். இதைத்தொடர்ந்து வரும் 19-ம் தேதி மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறும். மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் உள்ளதால், அக்கட்சியைச் சேர்ந்த ஒருவரே சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார்.


மக்களவையின் துணை சபாநாயகர் பதவியை கடந்த முறை 3-வது பெரிய கட்சியாக இருந்த அதிமுகவுக்கு வழங்கிய பாஜக, இந்த முறை 3-வது பெரிய கட்சியான திமுகவுக்கு அந்த இடத்தை வழங்குமா என கேள்வி எழுந்துள்ளது.

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள ஜெகன் மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனைத்துக்கட்சி கூட்டம்
சபாநாயகர் தேர்வுக்கு பிறகு, 20-ம் தேதி நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

இதைத்தொடர்ந்து குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெறும்.  ஜுலை 4-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.

இதையடுத்து ஜுலை 5-ம் தேதி நிதி நிலை அறிக்கையை அவர் தாக்கல் செய்வார். பின்னர் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெறும். இந்த மக்களவை கூட்டத்தொடர் ஜுலை மாதம் 26-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தும் வகையில் நேற்று மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரஹலாத் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம் நபி ஆசாத் மற்றும் ஆனந்த் ஷர்மா, திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் டெரிக் ஓ ப்ரைன், சமாஜ்வாதி சார்பில் ராம்கோபால் யாதவ், அதிமுகவின் நவநீத கிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற கட்சி தலைவர் டி.ஆர்.பாலு, நீட் தேர்வு, மேகதாது அணை, காவிரி நீர் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் திமுக குரல் எழுப்பும் என்றார்.

அனைத்துக்கட்சி கூட்டம் பயனுள்ள வகையில் இருந்ததாகவும், கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக்கட்சியிரும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதனிடையே வரும் 19 -ம் தேதி அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம், இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு விழா, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின கொண்டாட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Also see... காதல் முதல் அரிவாள் வெட்டு வரை... சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்