16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 6 பேர்: உடன் இருந்த தந்தை, 4 வயது குழந்தையை கல்லால் அடித்து கொலை செய்த கொடூரம்!

பாலியல் வன்புணர்வு

சிறுமி, அவரின் தந்தை, மற்றும் 4 வயது குழந்தை ஆகியோரை கல்லால் அடித்தும் குச்சிகளால் தாக்கியும் கொலை செய்துள்ளனர்.

  • Share this:
16 வயது சிறுமி ஒருவரை காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்ற 6 பேர் கொண்ட கும்பல், அவரை பாலியல் வன்புணர்வு செய்ததுடன், உடன் இருந்த சிறுமியின் தந்தை மற்றும் 4 வயது பெண் குழந்தை ஒன்றையும் கல்லால் அடித்து கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள சத்ரேங்கா எனும் கிராமத்தின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் கடந்த ஜனவரி 29ம் தேதி இந்த கொடூர நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஆனால் சம்பவம் நடைபெற்று 3 நாட்கள் கழித்து கடந்த செவ்வாய்க்கிழமை (பிப் 2) அன்று தான் அக்கோர சம்பவம் குறித்து வெளியுலகிற்கு தெரியவந்தது.

பர்பானி எனும் கிராமத்தைச் சேர்ந்த அந்த 16 வயது சிறுமியின் தந்தை, அதே கிராமத்தைச் சேர்ந்த மஞ்ச்வார் என்பவரிடம் கால்நடைகளை பராமரித்து வரும் பணியில் கடந்த ஆண்டு ஜூலை முதல் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 29 அன்று கால்நடை பராமரித்து வந்த நபர், அவருடைய 16 வயது மகள் மற்றும் அவரின் மகன் வழி பேத்தி (வயது 4) ஆகிய மூவரையும் சத்ரேங்கா கிராமத்தில் உள்ள அவர்களின் வீட்டில் விடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் மூவரையும் மஞ்ச்வார் அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் கோரை எனும் கிராமத்தில் இருந்த மதுபானக்கடையில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய மஞ்ச்வார், மது அருந்தியிருக்கிறார். அப்போது அவரின் கூட்டாளிகளும் அவருடன் இணைந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் மலையடிவாரமான கதுப்ரோடா எனும் காட்டுப்பகுதிக்கு மூவரையும் இழுத்துச் சென்ற மஞ்ச்வார் உள்ளிட்ட 6 பேரும் 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர். இதன் பின்னர் அச்சிறுமி, அவரின் தந்தை, மற்றும் 4 வயது குழந்தை ஆகியோரை கல்லால் அடித்தும் குச்சிகளால் தாக்கியும் கொலை செய்துள்ளனர்.

இதனிடையே தனது 4 வயது மகள், சகோதரி, தந்தை ஆகியோரை காணவில்லை என சிறுமியின் சகோதரர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில் தான் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது. தந்தை மற்றும் அவரின் 4 வயது பேத்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். பதைபதைக்கச் செய்யும் இந்த சம்பவம் சட்டீஸ்கர் மாநிலத்தை உலுக்கியுள்ளது.

Pahadi Korwa எனும் மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்த மூவரின் கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை, கூட்டுப் பாலியல் வன்புணர்வு, போஸ்கோ, மலைவாழ் மக்கள் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.
Published by:Arun
First published: