நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்... குடியரசுத் தலைவர் உரையை புறக்கணிக்க 16 எதிர்க்கட்சிகள் முடிவு

கோப்புப்படம்

குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணிக்க உள்ளதாக 16 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. 

  • Last Updated :
  • Share this:
    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் நாளை உரையாற்றும் நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இதனை புறக்கணிக்க உள்ளதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.  ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார்.  பொருளாதார ஆய்வறிக்கை, வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது.

    இதையடுத்து, அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் திங்கட்கிழமை தாக்கல் செய்ய உள்ளார்.  இந்த ஆண்டில் முதல்முறையாக காகிதமில்லாமல் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

    இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உரையை புறக்கணிக்க உள்ளதாக 16 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.  காங்கிரஸ், திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், மாநிலங்கள் மற்றும் விவசாய சங்கங்களுடன் ஆலோசனை நடத்தாமல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சட்டங்களை நீக்காவிட்டால், தேசிய உணவு பாதுகாப்பு சீர்குலையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், டெல்லியில் நடந்த வன்முறை குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

     

    இதனிடையே, கேரளாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது வயநாடு தொகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், பெரும்பாலான விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களில் உள்ள விவரங்கள் முழுமையாக தெரியாது என்று கூறினார். இதனை அனைத்து விவசாயிகளும் அறிந்துகொண்டிருந்தால், இந்தியா பற்றி எரிந்திருக்கும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.

    காங்கிரஸ் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை தடுக்க முடியாததால், மாநிலங்களில் நிறைவேற்ற வேண்டாம் என்று பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களை மோடி கேட்டுக் கொண்டதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதனிடையே வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி மேற்கு வங்க சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
    Published by:Vijay R
    First published: