கேரள மாநிலம் பாலக்காட்டில் சமீபத்தில் பிடிபட்ட தோனி என்ற காட்டு யானையின் உடலில் இருந்து 15 நாட்டுத் துப்பாக்கி குண்டுகளை கால்நடை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை அகற்றப்பட்டுவிட்டதாக மாநில வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், மக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வழிதவறி வரும் விலங்குகளை சுடுவது மிகவும் வருத்தமளிக்கிறது. குடியிருப்புக்குள் விலங்குகள் நுழைவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம். ஆனால், இதற்கு அது தீர்வல்ல என்று கூறினார். வனவிலங்குகளை இதுபோன்று கையாண்டால், அவை மேலும் ஆக்ரோஷமாகிவிடும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.
பெயர் வெளியிட விரும்பாத வன அதிகாரி ஒருவர் கூறுகையில், பெரும்பாலான குண்டுகள் யானையின் உடலில் மிகவும் ஆழமாக இல்லை என்பதால் அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. மேலும், அவை நாட்டுத் துப்பாக்கி அல்லது ஏர் கன்களில் இருந்து சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது என்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிடிபட்ட யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தோனி யானை புதிய சுற்றுப்புறங்களுடன் பழகியவுடன், ஊடுருவும் விலங்குகளை பயமுறுத்துவதற்கான பயிற்சியைத் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனவரியில் மட்டும் இரண்டு யானைகள், ஒரு புலி பிடிக்கப்பட்டு விலங்குகள் மீட்பு மையத்திற்கு அனுப்பப்பட்டது. வயநாட்டில் ஓராண்டில் 6 புலிகள் பிடிபட்ட நிலையில், அவற்றில் ஒன்று பின்னர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனவரி 12 அன்று வயநாட்டில் புலி தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். கடந்த வாரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி, கேரளாவில் 2018 மற்றும் 2022-க்கு இடைபட்ட காலத்தில் குறைந்தது 105 பேர் யானை தாக்குதலால் இறந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
இடுக்கியில் கடந்த புதன்கிழமை யானை தாக்கியதில் ஊடுருவும் விலங்குகளை விரட்டுவதில் நிபுணரான ஒருவர் உயிரிழந்தார். யானைக் கூட்டத்தைத் துரத்தும்போது காணாமல் போன அவர், பின்னர் சடலமாக மீட்கப்பட்டார். யானைகளைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற அவர், சைகையிலும், உடல்மொழியிலும் திறம்பட செயல்பட்டதால், அவரது இழப்பு அத்துறைக்கு பேரிழப்பு என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்த நிபுணரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 15 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.
அதிகரித்து வரும் விலங்குகளின் தாக்குதல்கள், உயிரிழப்புகளைக் கருத்தில் கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் வனத்தில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகப்போவதாக தமிழக அரசு கடந்த வாரம் கூறியது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.