முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரம் உட்பட 14 எம்.பி.க்கள் உடல்நிலைக் காரணங்களால் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதிலிருந்து விடுப்பு பெற்றுள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ஆம் தேதி தொடங்கி வரும் அக்டோபர் ஒன்றாம் தேதிவரை நடைபெறுகிறது. சமூக இடைவெளி, நோய்த் தொற்று பரிசோதனைகள் உள்ளிட்ட கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு காலை 9 மணிமுதல் மதியம் 1 மணி வரை மாநிலங்களவையும், மதியம் 3 மணியிலிருந்து 7 மணி வரை மக்களவையும் நடைபெற்று வருகிறது.
கொரோனா தொற்று உள்ளிட்ட காரணங்களால் 200-க்கும் மேற்பட்ட எம்பிக்கள் ஏற்கனவே அவை நடவடிக்கைகளில் பங்கேற்காத நிலையில், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், அன்புமணி ராமதாஸ், நவநீதகிருஷ்ணன், ஆஸ்கர் பெர்னாண்டஸ் உள்ளிட்ட 14 எம்பிக்கள் விடுப்பு அளிக்க வேண்டும் என மாநிலங்களவைத் தலைவருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனவே அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதிலிருந்து 14 எம்பி.,க்களுக்கும் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த 14 பேரில் 11 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
நாடாளுமன்றம் தொடங்குவதற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா சோதனையில் இரு அவைகளிலும் 30-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, சுரேஷ் அங்காடி ஆகியோரும்
மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.