முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 14 பேரில் 13 பேர் பலியானதாகவும், ஒருவருக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பிபின் ராவத் உடல்நிலை குறித்த தகவல் மர்மாக நீடிக்கிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத், ராணுவ அதிகாரிகள், வீரர்கள் என 14 பேர் பயணித்த நிலையில் இன்று மதியம் 12.20 மணியளவில் ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கி மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
விபத்துக்குள்ளான எம்ஐ 17 வி5 ரக ராணுவ ஹெலிகாப்டர் கோவை மாவட்டம் சூலூர் விமானதளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ மையத்துக்கு சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வெலிங்டன் ராணுவ மையத்தில் இன்று பிற்பகல் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுவதற்காக பிபின் ராவத் வந்து கொண்டிருந்த நிலையில் வெலிங்டனுக்கு 10 கிமீ தொலைவில் விபத்து நேரிட்டது.
இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டர் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. விபத்து நடைபெற்ற இடம் அடர் வனப்பகுதியாக இருப்பதாலும், விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில் தொடர்ந்து தீ மளமளவென பற்றி எரிந்தது. தீயை அணைக்கும் முயற்சிகளில் அப்பகுதிவாசிகள் ஈடுபட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் இருந்து காயமடைந்தவர்களும், உடல்களும் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவருக்கு சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் தீயில் கருகியுள்ளதால் அவர்களை அடையாளும் பணிகள் டி.என்.ஏ பரிசோதனை மூலம் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த ஹெலிகாப்டரில் பயணித்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை என்ன என்பது இன்னமும் மர்மமாக நீடிக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Army Chief General Bipin Rawat, Helicopter, Helicopter Crash, Indian army, Nilgiris