அசாமில் விஷக்காளான்கள் சாப்பிட்ட 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் விஷக் காளான்களை சாப்பிட்டதால் ஏற்பட்ட உடல் நலக்குறை காரணமாக மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும் ஒன்பது பேர் உயிரிழந்தனர். நேற்று முன் தினம் நான்கு பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இதனால் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.
அசாம் மாநிலம் திப்ருகார், ஷிவசாகர், தின்சுஹியா உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள வனப்பகுதியில் காளான் சீசன் என்பதால் அங்கு காளான் விளைந்துள்ளது. இதனை பறித்து வீட்டிற்கு எடுத்துச்சென்ற சிலர் கடந்த ஞாயிறன்று சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதில் 35 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம், கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதுக்குறித்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பிரசாந்த் டிஹிங்கியா கூறுகையில், விஷ காளான்களை சாப்பிட்டதாக 35 பேர் அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், அவர்களில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் காடுகளில் இருந்து பறிக்கும் காளான்களை உண்ணக்கூடிய காளான்கள் என்று தவறாக நினைக்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க காளான்களை உட்கொள்வது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஏஆர் ரகுமான் பகிர்ந்த தமிழணங்கு ஓவியத்தை சிற்பமாக உருவாக்கிய மாணவன்
பலியானவர்களில் பெரும்பாலானோர் தேயிலை தோட்டத்தில் பணி செய்து வருபவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தேயிலைத் தோட்டப் பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.