2021ம் ஆண்டில் தற்போது வரை 126 மருத்துவர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிப்புக்கு ஆகாவது முன்களப் பணியாளர்களும், கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை மேற்கொண்டு வரும் மருத்துவர்களுமே. கவச உடை, முகக்கவசம் என பல்வேறு உபகரணங்களை அவர்கள் பயன்படுத்தி பணியாற்றினாலும் கூட வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகிவிடுகின்றனர்.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் 126 மருத்துவர்கள் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ அசோசியேஷன் நடத்தியுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 736 மருத்துவர்கள் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கொரோனா குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ள இந்திய மருத்துவ அசோசியேஷனைச் சேர்ந்த மருத்துவர் ரவி வான்கேட்கர் கூறுகையில், “இந்திய சுகாதார துறையினர் மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் கொரோனாவினால் உயிரிழந்த சுகாதார ஊழியர்கள் குறித்தும் அவர்களுடைய தடுப்பூசி தரவுகள் குறித்தும் ஆவணப்படுத்தி வைத்திருந்திருக்க வேண்டும். தற்போது இந்திய மருத்துவ அசோசியேஷன் இந்த தரவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது, ஆனால் மாநில அரசுகள் இந்த பணியை மேற்கொள்ளவில்லை” என்றார்.
தேசிய அளவில் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் தொடங்கியது. தற்போது வரைக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ள 16 கோடி பேரில் 94.7 லட்சம் சுகாதார பணியாளர்கள் தங்களின் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டிருக்கின்றனர், இதில் 63.5 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் போட்டுள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்த சுகாதார பணியாளர்களின் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக சிறப்பு நிதியம் ஒன்றை இந்திய மருத்துவ அசோசியேஷன் உருவாக்கியது. இதில் இருந்து 1.6 கோடி ரூபாய் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பாஜகவுக்கு வாக்களித்ததற்காக கொலை செய்ய முயற்சித்தார்கள்: அசாமில் அகதிகாளாக தஞ்சம் புகுந்த மேற்குவங்கத்தினர்!
இந்திய மருத்துவ அசோசியேஷன் அளித்த தகவலின்படி, பீகாரில் அதிகபட்சமாக 59 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிரா, தமிழகம், கர்நாடகா, உத்தரகாண்ட், மேற்குவங்காளம் மற்றும் டெல்லி ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை10,000ஐ கடந்துள்ளது.
கொரோனாவால் கடந்த ஆண்டு 162 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் தெரிவித்திருந்த நிலையில், இந்திய மருத்துவ அசோசியேஷன் அந்த எண்ணிக்கை தவறு எனவும் 734 மருத்துவர்கள் கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு உயிரிழந்திருந்ததாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது..
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.