ஜம்மு-காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், அங்கு விரைவில் துணைநிலை ஆளுநர் நியமிக்கப்படுகிறார். அதேபோல், 87 ஆக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கையும் 114 ஆக உயருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதி மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது, 87 தொகுதிகளை கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை, 107 ஆக உயரும் நிலை உருவாகியுள்ளது. மேலும் மறுவரையறைக்கு பிறகு மொத்தம் 114 தொகுதிகளாகவும் அதிகரிக்கப்படுகிறது.
தற்போதுள்ள லடாக் பகுதியில் நான்கு சட்டப்பேரவை தொகுதிகள் உள்ள நிலையில், இனி லடாக் பிராந்தியமானது, லே, கார்கில் என இரண்டு மாவட்டங்களுடன், சட்டப்பேரவையில்லா யூனியன் பிரதேசமாக இயங்கும். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 5 மக்களவை தொகுதிகளும், லடாக்கில் ஒரு தொகுதி உள்ளதாகவும் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 24 தொகுதிகள் காலியாகவே தொடரும் எனவும் மசோதாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த சட்டப்பேரவை உறுப்பினர்களில், பத்து சதவீதத்திற்கும் உட்பட்ட அளவிலேயே அமைச்சரவை இருக்கவேண்டும் எனவும், ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை வழகாட்டுதலுடன் செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டப்பேரவையில், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது அதேபோல், துணைநிலை ஆளுநர், இரண்டு உறுப்பினர்களை சட்டப்பேரவைக்கு நியமிக்கலாம் எனவும், இதில் பெண்கள் குறைவாக பிரதிநிதித்துவம் பெற்றால், இரண்டு பெண் எம்.எல்.ஏ.க்களையும் நியமிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறிய நிலையில், இன்று மக்களவையில் விவாதம் நடைபெறுகிறது. இதனிடையே, பாகிஸ்தானிலும் இதுகுறித்து விவாதிப்பதற்கு நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. இதுதொடர்பாக பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, இப்பிரச்னை பற்றி ஐ,நா, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் விவாதிக்கப்படும் என்றார்.
Published by:Sankar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.