அடுத்த 2 வாரங்களில் தினசரி 1000 கொரோனா உயிரிழப்புகள்.. அதிரவைக்கும் மகாராஷ்டிர சுகாதாரத்துறை..

கொரோனா உயிரிழப்புகள்

மகாராஷ்டிராவில் அடுத்த 2 வாரங்களில் தினசரியாக 1,000 கொரோனா உயிரிழப்புகள் ஏற்படும் என்று அம்மாநில சுகாதாரத்துறை கணித்துள்ளது.

  • Share this:
அடுத்த 2 வாரங்களில் மகாராஷ்டிராவில் தினசரி கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் 1000 என்ற அளவில் இருக்கும் என்று மகாராஷ்டிர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அடுத்ததாக மரணங்களும் அதிகரிக்கும் என்று வெளியாகி இருக்கும் தகவல் அம்மாநில மக்களை அச்சத்தின் பிடியில் தள்ளியிருக்கிறது.

சமீப நாட்களில் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் தொடக்கமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா சூழல் குறித்து அம்மாநில சுகாதாரத்துறை மாவட்டங்களுக்கு அளித்துள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவருவோரின் ஏப்ரல் 4ம் தேதி வாக்கில் 3 லட்சத்தை தொடும் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது அதிகபட்சமாக புனேவில் 61,125 பேரும், நாக்பூரில் 47,707 பேரும், மும்பையில் 32,927 பேரும் நோய்த்தொற்றுகாக சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிர சுகாதாரத்துறை தெரிவித்திருப்பதாவது, “அடுத்த 11 நாட்களில் கொரோனா உயிரிழப்புகள் 64,000 என்ற அளவை தொடக்கூடும். நாக்பூர் மற்றும் தானே மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பை சந்திக்கும். 1% என்ற தற்போதைய வாராந்திர கொரோனா பாதிப்பு உயர்வை கொண்டு இந்த கணிப்பு வெளியிடப்படுகிறது.

தற்போதைய அளவில் ஆக்ஸிஜன் அல்லாத படுக்கைகள், ஐசியூ படுக்கைகள், வெண்டிலேட்டர்கள் தேவையான அளவில் உள்ளாது. இருப்பினும் மாநிலத்தில் கூடுதலாக 4000 ஆக்ஸிஜன் படுக்கைகள் தேவைப்படுகிறது. மகாராஷ்டிராவில் கடந்த 3 - 4 தினங்களில் ஒரு லட்சத்துக்கும் மேலானவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 41% மேலான தொற்றாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் 8% பேர் ஆபத்தான நிலையிலும், 0.71% பேர் வெண்டிலேட்டரிலும் சிகிச்சை பெறுகின்றனர்.” என கூறப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 31,855 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது பெருந்தொற்று பரவல் தொடங்கியதில் இருந்து பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
Published by:Arun
First published: