புதுச்சேரியில் அணிலுக்கு விஷம் வைத்து பிடிக்கும் கும்பல்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்... (வீடியோ)

Youtube Video

புதுச்சேரியில் பெயின்ட் அடிக்கும் பிரஸ் தயாரிக்கவும், கறிக்காகவும் அணில்களுக்கு நஞ்சு கலந்த பிஸ்கட்டை கொடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட அணில்களை பிடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

 • Share this:


  புதுச்சேரி நகர பகுதியில் மரங்கள் அதிகம் உள்ள காமாட்சி அம்மன் வீதி உள்ளது. மரங்கள் அதிக அளவு இருப்பதால், அணில்களும் பறவைகளும் இந்த பகுதியில் அதிகமாக உள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணில்கள் அதிகளவு இறந்து மரத்தில் இருந்து சாலையில் விழுவதாக புகார் எழுந்துள்ளது. அத்துடன் இறந்து விழும் அணில்களை ஒரு கும்பல் சாக்குமூட்டையில் தூக்கி செல்வதாக நடைபயிற்சி செல்வோர் வனத்துறையிடம் புகார் அளித்தனர்.

  இதை தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது சாலையிலும் சாக்குப்பையுடன் நின்றுக் கொண்டிருந்த நபர் ஒருவர் பிஸ்கட்டுகளை மரங்களின் இடுக்குகளில் வைப்பதை வனத்துறையினர் பார்த்துள்ளனர். மேலும், அவரது கையில் இருந்த சாக்குப்பையை சோதனை செய்ததில் நூற்றுக்கும் மேற்பட்ட அணிகள் இறந்தநிலையில் இருந்துள்ளன.

  இதை தொடந்து சந்தேகப்படும் நபரை காவல்துறை உதவியுன் பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. சிக்கிய நபர் புதுவை கோவிந்தசாலை பகுதியை சேர்ந்த 53 வயது சார்லஸ் என்பதும் ஆட்டோ ஒட்டுநராக இருப்பதும் தெரியவந்தது.

  அணில்களுக்கு விஷம் தடவிய பிஸ்கட்டுகளை கொடுத்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது. அவற்றின் ரோமங்களை ஒவியம் வரையும் பிரஷ்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு விற்று பணம் பார்த்துள்ளதுள்ளார் சார்லஸ்.

  மேலும், அணிலின் கறியை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்றும் நோய்கள் விலகும் என்று கூறி அணில் கறியை விற்றுள்ளார். இதனை அடுத்து சார்லஸை கைது செய்த வனத்துறையினர் அவர் வைத்திருந்த நூற்றிற்கும் மேற்பட்ட இறந்த அணில்களை பறிமுதல் செய்தனர்.

  மேலும், அணில்களை பிரேத பரிசோதனை செய்த வனத்துறையினர் எது போன்ற விஷம் அணில்களுக்கு கொடுக்கப்பட்டது என்று விசாரித்து வருகின்றனர். இறந்த அணில்களை சாப்பிட கூடாது என்று எச்சரித்துள்ள போலீசார் விஷம் வைத்து கொல்லப்பட்ட அணிகளை சாப்பிட்டால் அது மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.

  அணில் விற்பவர்கள் தொடர்பாக தகவல் கிடைத்தால் 0413 2204808 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என்று வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: