ஒற்றைக் காலில் தினமும் ஒரு கிமீ தூரம் பள்ளிக்கு ஒற்றைக் காலிலே பயணம் செய்த 10 வயது சிறுமிக்கு தற்போது செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிறுமியின் உத்வேகமாக செயல் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், அதன் தாக்கத்தால் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
மாவோயிஸ்ட் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஒன்றான பீகாரின் ஜாமுய் (Jamui) மாவட்டத்தைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமியான சீமா மான்ஜி. 10 வயதான சீமாவின் தந்தை கூலி தொழிலாளர். இவர் வேறு மாநிலங்களுக்கு சென்று தான் வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். சீமாவின் தாயாரும் செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார். சீமாவின் உடன் பிறந்தோர் 5 பேர். ஆறு குழந்தைகளில் இரண்டாவது குழந்தையான சீமாவுக்கு இரண்டு ஆண்டுகள் முன் விபத்தில் சிக்கியதில் ஒரு கால் இல்லாமல் போனது.
விபத்தில் தனது ஒரு காலை இழந்தாலும் இந்த சிறுமி நம்பிக்கையை இழக்காமல் தினமும் ஒரு கிமீ தூரம் ஒற்றை காலிலேயே பள்ளிக்கு சென்று படித்து வந்தார். தனது வீட்டிலிருந்து தினமும் ஒரு கிலோ மீட்டர் தூரம் உற்சாகம் குறையாமல் பள்ளி செல்லும் சிறுமி சீமாவின் வீடியோ இணையதளத்தில் தற்போது வைரலானது. இவருக்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பாலிவுட் நடிகர் சோனு சூட் உள்ளிட்ட பலர் வியந்து பாராட்டி உதவிக்கரம் நீட்டிய நிலையில், அம்மாநில அரசு செயற்கை கால் பொருத்த உடனடியாக உத்தரவிட்டுள்ளது.
அதன் பேரில் அம்மாநிலத்தின் கல்வித்துறை சார்பில் சிறுமி சீமாவுக்கு வெற்றிகரமாக செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது. புதிய காலுடன் சீமா நிற்கும் புகைப்படத்தை ட்விட்டரில் ஐஏஎஸ் அலுவலர் அவானிஷ் சரண் பகிர்ந்துள்ளார். மாணவி சீமாவுக்கு நடிகர் சோனு சூட்டின் தொண்டு நிறுவனமும் உதவி செய்ய முன்வந்துள்ளது.
இதையும் படிங்க:
ட்ரோன் திருவிழாவில் இந்தியாவில் உருவாக்கிய மென்பொருளை அறிமுகப்படுத்திய சாங்கியசூத்திரா நிறுவனம்
தான் சிறப்பாக படித்து ஆசிரியராக வேண்டும் என கனவு கொண்டுள்ள சீமா, தன்னைப் போலவே பலருக்கும் கல்வியை கொண்டு சேர்ப்பதே நோக்கம் எனக் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.