தமிழகத்தின் நாட்டுப்புறக்கலைகளில் ஒன்றான கும்மி ஆட்டக்கலை தற்போது கோவில் திருவிழாக்களால் மறுமலர்ச்சி பெற்று வருகிறது. முருகப்பெருமான் மற்றும் வள்ளியின் திருமணத்தை மையமாக கொண்டு பாடப்படுவதும், பாடலுக்கு ஏற்றவாறு உடலை அசைத்து ஆடுவதும் வள்ளி கும்மி என்று அழைக்கப்படுகிறது. இந்த வள்ளி கும்மியில் வள்ளியின் பிறப்பு முதல் முருகப்பெருமானுடன் அவரது திருமணம் வரையிலான நிகழ்வுகள் தொகுக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக இந்த வள்ளிக்கும்மி மேற்கு மண்டல மாவட்டங்களில் மக்களால் பரவலாக பாடப்பட்டு வந்த நிலையில், நாளடைவில் இந்த கலை மெல்ல மெல்ல மக்களிடம் இருந்து மறைய துவங்கியது. இந்நிலையில் அழிந்து வந்த கும்மி ஆட்டக்கலையை மீட்டெடுக்கும் முயற்சியாக கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வள்ளி கும்மியாட்டம் கலை பயிற்சியை ஒரு சில ஆசிரியர்கள் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், நாமக்கல் அடுத்துள்ள மரூர்பட்டி கிராமத்தில் உள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் என சுமார் 300க்கும் மேற்பட்டோருக்கு கொங்கு ஈசன் வள்ளி கும்மி குழுவினர் சார்பில் 75 நாட்கள் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்டம் உள்ளிட்டவைகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அதன்பின் இன்று வள்ளி கும்மி அரங்கேற்றம் நடைபெற்றது.
இதில் முருகன் மற்றும் வள்ளி பாடல்களை பாடி கண்கவர் ஆட்டத்தை அரங்கேற்றினர். பாடலுக்கு ஏற்ப ஒன்று சேர ஆடியது கண்களுக்கு விருந்தாக அமைந்தது. மேலும் இந்த ஆட்டத்தை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்ததோடு தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal