முகப்பு /செய்தி /நாமக்கல் / நகை, பணத்துக்காக தலையணையால் அமுக்கி மூதாட்டி கொலை... ராசிபுரத்தில் பகீர் சம்பவம்..!

நகை, பணத்துக்காக தலையணையால் அமுக்கி மூதாட்டி கொலை... ராசிபுரத்தில் பகீர் சம்பவம்..!

கைதானவர்

கைதானவர்

Namakkal News : ராசிபுரம் அருகே வீட்டில் தனியாக இருந்த நாமக்கல் மாவட்ட பாஜக தலைவரின் சித்தியை கொலை செய்தவர் கைது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பிலிப்பாகுட்டை பகுதியை சேர்ந்த மூதாட்டி பாவாயி (66). இவரது கணவர் கடந்த 10 ஆண்டுக்கு முன்னரே இறந்துவிட்டார். இதனால் இவர் தனது விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு மணி (எ) கனகராஜ்(39) என்ற ஒரே மகன் உள்ளார்.

இவர் தற்போது அபுதாபியில் வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி அரூரில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். மூதாட்டியின் வீட்டில் எலெக்ட்ரிஷியன் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக வீட்டில் சுற்றுச்சுவரில் துளையிட்டு பணியானது நடைபெற்று வந்தது. கடந்த 9ம் தேதி நள்ளிரவில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் தலையணையை முகத்தில் அழுத்தி கொலை செய்தனர். பின்னர் பீரோவில் இருந்த நகை, பணம், 2 சிலிண்டர் மற்றும் மூதாட்டி அணிந்திருந்த 4 பவுன் தங்கச்சங்கிலி ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இதனைத்தொடர்ந்து நீண்ட நேரமாக வீட்டிலிருந்து மூதாட்டி வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டினுள்  சென்று பார்த்தனர். அப்போது மூதாட்டி படுக்கையில் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள்

சம்பவம் தொடர்பாக ஆயில்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் தடவியல் நிபுணர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் மோப்பநாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கண்டுபிடிக்கவில்லை. மேலும் மூதாட்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக ஆயில்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வீட்டில் வேலை செய்து வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலையாளிகள் குறித்து தகவல் கிடைக்காத நிலையில், ராசிபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக, நாரைக்கிணறு பிரிவு ரோடு பகுதியில் செந்தில்(38) என்பவரை இன்று கைது செய்தனர். விசாரணையில், நகை மற்றும் பணத்துக்காக மூதாட்டி பாவயியை கொலை செய்து, பணம் சிலிண்டர் உள்ளிட்டவற்றை திருடியது தெரியவந்தது. இவரிடம் இருந்து 1200 ரூபாய் பணம், 2 கேஸ் சிலிண்டர், Bosch Tools Box மற்றும் திருட பயன்படுத்திய TVS XL SUPER, பீரோவை உடைக்க பயன்படுத்திய கடப்பாறை ஆகியவற்றை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இவர், ஏற்கனவே ஆயில்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மெட்டாலா தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி திருட்டு வழக்கில் முன் தண்டனை குற்றவாளி ஆவார். மேலும் கொலையான மூதாட்டி பாவாயி நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர் சத்தியமூர்த்தியின் சித்தி என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் : சுரேஷ் - ராசிபுரம்

First published:

Tags: Crime News, Local News, Namakkal