வங்கிக்கே செல்லாதவரின் பெயரில் வங்கி கடன் வாங்கியதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பட்டணம் ரோடு சின்ன சந்து பகுதியைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மனைவி மீனாட்சி. இவர் நகராட்சி துவக்கப் பள்ளியின் மேலாண்மை குழு தலைவராக உள்ளார். மேலாண்மை குழு பெயரில் வங்கி கணக்கு தொடங்க மீனாட்சி மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகரபுரம் கனரா வங்கி சென்றுள்ளனர்.
அங்கு மீனாட்சியின் ஆதாரை பார்த்த வங்கி அதிகாரிகள் தங்கள் பெயரில் ஏற்கனவே, 75,000 ரூபாய் மகளிர் குழு கடன் உள்ளது. அதை முறையாக செலுத்த வேண்டும் என எச்சரித்தனர். இதைக் கேட்டு அதிர்ந்த மீனாட்சி, நான் இதுவரை வங்கிக்கு வந்ததில்லை. முதன்முதலாக தற்போது தான் இந்த வங்கிக்கு வருகிறேன். நான் எப்படி கடன் வாங்க முடியும் என்று வங்கி அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து வங்கி அதிகாரிகள் மகளிர் குழுவின் தலைவி ஒடுவங்குறிச்சி பகுதியை சேர்ந்த மரகதம் என்பவரிடம் கேட்டபோது அவர் தனக்குத் தெரியாது என கூறியும், அதே பகுதியைச் சேர்ந்த புஷ்பா என்பவர்தான் ஏற்பாடு செய்தார் எனக் கூறி தொலைபேசியை துண்டித்தார்.
தொடர்ந்து வங்கி அதிகாரிகள் புஷ்பாவை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் நேரடியாக சென்றும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்நிலையில் ராசிபுரம் வி கே ஆர் மண்டபம் பகுதியைச் சேர்ந்த அன்வர், ஷகீலா இருவரும் மீனாட்சி வீட்டிற்கு வந்து பணத்தை நாங்கள் கட்டி விடுகிறோம், எந்த மேல் நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கூறியுள்ளனர்.
வங்கிக்கு செல்லாத தன் பெயரில் முறைகேடாக எப்படி கடன் பெற்றீர்கள் என்று மீனாட்சி கேட்டதற்கு அவர்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதனால் ராசிபுரம் காவல் நிலையத்தில் மீனாட்சி புகார் அளிக்க, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நடிகர் விக்ரமை காண முண்டியடித்த ரசிகர்கள் மீது தாக்குதல்.. திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
மகளிர் குழுவில் சேர்வதற்காக கொடுக்கப்பட்ட ஆதார் கார்டுகளை மோசடியாக பயன்படுத்தி, மகளிர் குழுவின் நிர்வாகிகள் கனரா வங்கியில் பல லட்சங்கள் கடன் வாங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்ததுள்ளது. இதுகுறித்து ஏற்கனவே சாந்தி என்பவர் ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதேப்போல ஒடுவன்குறிச்சி பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி என்பவருக்கு வங்கியில் வாங்கிய 5 லட்சம் ரூபாய் கடனை திருப்பி கட்டச் சொல்லி நோட்டீஸ் வந்ததையடுத்து சீதாலட்சுமி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ராசிபுரம் அடுத்துள்ள சந்திரசேகரபுரத்தில் உள்ள கனரா வங்கிக்கு சென்று மேலாளரிடம் நோட்டீஸ் குறித்து கேட்டுள்ளனர்.
முறையாக பதில் அளிக்காததால் வங்கி முன்பு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். உடனே வங்கி மேலாளர் மற்றும் வங்கியின் மண்டல பொது மேலாளர் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து தவறு நடந்திருப்பது உண்மைதான் என கூறி, சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இதுபோல் பலரது பெயரில் பல லட்சம் மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Banking, Cheating case, Crime News, Loan, Namakkal