நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பிரிவு ரோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்துள்ள தகவல் அறிந்து சம்பவ இடத்தில் விசாரணைக்கு சென்ற ராசிபுரம் காவல் துறையை சேர்ந்த தேவராஜ் மற்றும் புதுச்சத்திரம் காவல் துறையைச் சேர்ந்த சிறப்பு துணை ஆய்வாளர் சந்திரசேகர் ஆகியோர் மீது சுற்றுலா வேன் அதிவேகமாக மோதியதில் வாகனத்தின் அடியில் இருசக்கர வாகனத்துடன் சிக்கி இரு காவலர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நாமக்கலில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளான கார் குறித்து தகவல் சேகரிக்க சென்ற இடத்தில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்திய போது அதிவேகமாக வந்த சுற்றுலா வேன் மோதியதில் இரண்டு காவலர்கள் வாகனத்தின் அடியில் சிக்கி உயிரிழந்தனர்.
நாமக்கல் டு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அணைப்பாளையம் பிரிவு அருகே நெடுஞ்சாலை துறை மூலமாக சாலை விரிவாக்கப் பணி மற்றும் பாலம் அமைக்கும் பணி கடந்த 3 மாதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 1 மணி அளவில் திருநெல்வேலியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற கார் பாலம் வேலை நடைபெறுவதால் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த மாற்றுப் பாதையில் செல்லாமல் தடுப்பு தகரத்தின் மீது அதி பயங்கரமாக மோதி நின்றது.
இந்தக் காரை ஓசூரை சேர்ந்த அரியநாயகம் என்பவர் ஓட்டி வந்தார். இவருக்கும் இவருடன் வந்தவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்ட நிலையில் காரை இயக்க முடியாத நிலையில் ரெக்கவரி வாகனத்திற்கு போன் செய்துவிட்டு காரிலேயே காத்திருந்து உள்ளார்.
சுமார் 2 மணி அளவில் விபத்து குறித்து விவரம் அறிந்த ராசிபுரம் காவல்துறையைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் பின்புறம் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவரை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். விபத்து நடந்த இடம் புதுச்சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காரணத்தினால் புதுச்சத்திரம் காவல் துறையைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவருடன் அங்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்.. தொற்று பரவலை கட்டுப்படுத்த தீவிரம்
காரில் இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் சேலம் நோக்கி வந்த டாரஸ் லாரி அதிவேகமாக வந்ததைக் கண்டு லாரியை நிறுத்தி ஓட்டுனரை கீழே இறங்கச் சொல்லி உள்ளனர். ஓட்டுனர் அதிக போதையில் இருந்ததால் தன்னுடன் வந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இருவரை அனுப்பி டாரஸ் லாரியை பக்கவாட்டில் நிறுத்த காவல்துறையினர் கூறியதாக கூறப்படுகிறது.
அப்போது திருநள்ளாறு சனி பகவான் கோயிலுக்கு சென்றுவிட்டு சொந்த ஊரான இளம்பிள்ளை திரும்பிய சுற்றுலா வேன் எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த இரண்டு காவலர்கள் மீது பயங்கரமாக மோதியும், லாரியின் பின்புறம் மோதி நின்றது.
இதில் சுற்றுலா வேன் அடியில் இரு சக்கர வாகனத்துடன் காவலர்கள் இருவரும் சிக்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
விபத்தை கண்ட லாரி ஓட்டுனர் தப்பி ஓடிய நிலையில் வேன் ஓட்டுநர் மாதையன் சிறு காயங்களுடன் இராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் வேனில் 25 பேர் குடும்பத்துடன் வந்த நிலையில் அதில் 5 பேருக்கு பலமான காயம் ஏற்பட்டதால் 108 ஆம்புலன்சில் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் படிக்க: தமிழகத்தின் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களின் பெயரில் மோசடி.. ராஜஸ்தான் கும்பல் அட்டகாசம்..
நாமக்கல் டு சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூன்று இடங்களில் இதுபோல் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முறையான தடுப்பு வேலிகள் அமைக்காததாலும், ஒளிரும் ஸ்டிக்கர்கள் முறையாக ஒட்டப்படாதாலும், எச்சரிக்கை பலகைகள் இல்லாததாலும் இரவு நேரங்களில் அதிவேகமாக வரும் வாகனங்கள் தினந்தோறும் விபத்துக்களில் சிக்குவது வாடிக்கையாகவே உள்ளது.
விபத்து நடந்த இடத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி விசாரணை நடத்தச் சென்ற இரண்டு காவலர்கள் சுற்றுலா வேன் மோதி பலியானது காவலர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: சுரேஷ் - நாமக்கல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.