நாமக்கல்லில் தலைக்கவசம் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்ட நகராட்சி ஊழியர் ஒருவர், காவல் நிலையம் முன்பாக குப்பையைக் கொட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாமக்கல் நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் கந்தசாமி. இவர் திங்கட்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் மணிவேல், நகராட்சி ஊழியரை மடக்கி பிடித்து தலைக்கவசம் அணியாததற்கு ரூ.1000 அபராதம் விதித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கந்தசாமி போலீசாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அலுவலகத்திற்கு வந்த அவர் போக்குவரத்துக் உதவி ஆய்வாளர் அபராதம் விதித்து தகராறு செய்ததை எண்ணி வேதனை அடைந்துள்ளார்.
பின்னர் மாலை 5 மணி அளவில் இரு துப்புரவு ஊழியர்களை அழைத்துக் கொண்டு பேட்டரி வாகனத்தில் நிரம்பியிருந்த குப்பைகளை நாமக்கல் காவல் நிலையம் முன்பு கொட்டினார். அங்கு வந்த போலீசார் கந்தசாமியிடம் கேட்டபோது, வண்டிகள் பழுதாகி விட்டதால் குப்பைகளை கொட்டிச் செல்வதாகவும், அரை மணி நேரத்திற்கு பின் வந்து எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க | நாமக்கல்லில் ரூ.50,000 சம்பளத்தில் அரசு வேலை - மிஸ் பண்ணாதீங்க..
இதனை நம்பிய போலீசாரும் சரி என்று சென்றுவிட்டு மற்ற வேலைகளை பார்த்துள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் மீண்டும் வந்து குப்பையை எடுக்காததால், காவல் நிலையம் முன்பு தேங்கி கிடந்த குப்பைகளின் துர்நாற்றத்தால் பொதுமக்கள் முகம் சுழித்தனர். அதன் பிறகு தான் போக்குவரத்து உதவி ஆய்வாளருடன் கந்தசாமிக்கு ஏற்பட்ட மோதல் விவகாரம் குறித்து போலீசாருக்கு தெரிய வந்தது.
இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர் கி.மு.சுதாவிடம் போலீசார் புகார் அளித்துள்ளனர். அவர் சம்பந்தப்பட்ட நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் கந்தசாமியிடம் விளக்கம் கேட்டுள்ளார். மேலும், தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்: ரவிச்சந்திரன், நாமக்கல்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal