ராசிபுரம் அருகே ஆண்டகளுர்கேட் பகுதியில் உள்ள ஆவின் Hi -Tech பாலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஆய்வு செய்வதற்காக தான் சாப்பிட்ட பால்கோவவிற்கு பணத்தை கொடுத்த பால்வளத்துறை அமைச்சர் நாசர், 2 நெய் பாட்டில் குறைவாக இருப்பது தொடர்பாக மேலாளரிடம் கேள்வி எழுப்பினார். தன்னை நடவடிக்கை எடுக்க வைத்துவிடாதீர்கள் எனவும் அவர் எச்சரித்தார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆண்டகளுர்கேட் அருகே சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் ஆவினின் Hi -Tech பாலகம் உள்ளது. இங்கு, தமிழக பால்வளத்துறை அமைச்சர் மு.நாசர் ஆய்வு நடத்தினார். முதலில், Hi - Tech ஆவின் பாலகத்தில் உள்ள பால், நெய் பாக்கெட்டுகளை ஆய்வு செய்தார். பின்னர், பால்கோவாவை சாப்பிட்டு ஆய்வு செய்தவர் அதற்கான பணத்தை கொடுத்தார். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தொடர்ந்து, கணக்கு - வழக்குகளை பார்வையிட்டவர் 17-ஆம் தேதி கணக்கு விடுபட்டிருந்ததை கவனித்தார். Hi - Tech பாலகத்தின் விற்பனை மேலாளர் முத்துவேலிடம் கணக்குகளை இனி கம்யூட்டரில் பதிவு செய்யும்படி அறிவுறுத்தினார். தொடர்ந்து கணக்கு வழக்கு நோட்டுகளை பார்வையிட்டவர் 2 நெய் பாட்டில் குறைவாக இருப்பதை கண்டறிந்தார்.
இதை அருகேயுள்ள மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமாரிடம் கூறியவர், ஒவ்வொன்றாக எடுக்க ஆரம்பித்தால் எவ்வளவு மாட்டுவீங்களோ தெரியாது. என்னை நடவடிக்கை எடுக்க வைக்காதீங்க என முத்து வேலிடம் எச்சரிக்கும் தொணியில் கூறினார்.. இதனை பார்த்துக்கொண்டிருந்த ஆவின் மாவட்ட அதிகாரிகள் பேசவே, சப்போட்டுக்கு வராதீங்க அவரிடம் தெரிவித்தார்.
மேலும் படிக்க: அரசு போட்டித் தேர்வுகளுக்கு திருச்செங்கோட்டில் இலவச பயிற்சி.. இதில் எப்படி சேரலாம்?
‘மீண்டும் பத்து நாட்களில் இங்கு வருவேன்’ என கறார் காட்டியவர், பாலகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், பாலகத்தின் முன்பு வாடிக்கையாளர்கள் அமரும் வகையில், குடையுடன் கூடிய இருக்கை அமைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி. சிங், சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், ராசிபுரம் ஒன்றிய தலைவர் கே.பி.ஜெகநாதன் மற்றும் ஆவின் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்: சுரேஷ் - நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.