முகப்பு /செய்தி /நாமக்கல் / தூக்க கலக்கத்தில் டிரைவிங்... லாரி மீது மோதிய கார்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் பலி..!

தூக்க கலக்கத்தில் டிரைவிங்... லாரி மீது மோதிய கார்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் பலி..!

விபத்தில் நொறுங்கிய கார்

விபத்தில் நொறுங்கிய கார்

லாரி மீது கார் மோதிய விபத்தில் நாமக்கல் மாவட்டத்தின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் பலியாகியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள மோர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார் டிரைவர் ரவி. இவர், தனது மனைவி கவிதா, உறவினர்கள் மணி, குஞ்சம்மாள், மகாலட்சுமி, சாந்தி மற்றும் கவிதாவின் தம்பி மகள் லக்ஷனா (4) ஆகியோருடன் கரூரை அடுத்த வீரப்பூரில் நடைபெற்று வரும் கோயில் திருவிழாவிற்குச் சென்றார். காரை ரவி ஓட்டிச் சென்றுள்ளார்.

கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு, அனைவரும் காரில், நள்ளிரவு திருச்செங்கோடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.  சேலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பரமத்திவேலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே கார் வந்தபோது, எதிர்பாராத விதமாகச் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் இருந்த மணி என்ற கந்தாயி, குஞ்சம்மாள், மகாலட்சுமி, சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த கார் டிரைவர் ரவி, அவரது மனைவி கவிதா, நான்கு வயது பெண் குழந்தை லக்ஷனா ஆகியோரை அந்தப் பகுதியில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், மருத்துவமனைக்கு செல்லும் வழியில், கவிதா பரிதாபமாக உயிரிழந்தார். நான்கு வயது குழந்தை லக்ஷனா மற்றும் கார் டிரைவர் ரவி ஆகியோர் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பரமத்திவேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read : 3 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டவுள்ள சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு.. களம் காண தயாராகும் காளைகள்!

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் மோர்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போலீசாரின் விசாரணையில், டிரைவர் தூக்கத்தினால் வாகனத்தை இயக்கியதும், ஓய்வில்லாமல் காரை இயக்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

செய்தியாளர் - ரவிக்குமார்

First published:

Tags: Car accident, Namakkal, Women