முகப்பு /செய்தி /நாமக்கல் / ரூ.20 லட்சத்துக்காக கடத்தப்பட்ட பைனான்ஸ் அதிபர்.. அடித்தே கொன்ற மர்மகும்பல் - நாமக்கலில் பகீர் சம்பவம்

ரூ.20 லட்சத்துக்காக கடத்தப்பட்ட பைனான்ஸ் அதிபர்.. அடித்தே கொன்ற மர்மகும்பல் - நாமக்கலில் பகீர் சம்பவம்

உயிரிழந்த சரவணன்

உயிரிழந்த சரவணன்

நாமக்கல் மாவட்டத்தில் பைனான்ஸ் அதிபர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் குமரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் 39 வயதான சரவணன். இவரது மனைவி சத்யா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். சரவணன் தனது தோழி மகாலட்சுமியுடன் நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள டீச்சர்ஸ் காலனி பகுதியில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் பொதுமக்களுக்கு கடனாக வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்தனர். கிடைத்த லாபத்தை கமிஷன் அடிப்படையில் இருவரும் பிரித்துக் கொண்டனர்.

இந்நிலையில் கடந்த 3-ந்தேதி சரவணனை மர்ம கும்பல் ஒன்று கொல்லிமலையில் உள்ள செம்மேடு பகுதிக்கு கடத்திச் சென்றது. அங்குள்ள ஒரு விடுதி ஒன்றில் அறை வாடகைக்கு எடுத்து அதில் சரவணனை அடைத்து வைத்து 20 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கடுமையாக தாக்கி சித்திரவதை செய்துள்ளனர். பணம் கொடுக்கவில்லை என்றால் கொன்று விடுதாகவும் மிரட்டி உள்ளனர்.

இதனால் பயந்து போன சரவணன், செல்போனில் தனது மனைவி சத்யாவைத் தொடர்பு கொண்டு பணத்தை ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த சத்யா, உடனடியாக தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் கூறி பணத்துக்கு ஏற்பாடு செய்து வந்தார். மேலும் சரவணன் தனது பங்குதாரர் மகாலட்சுமியிடமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரும் உடனே பணத்தை தயார் செய்து தருவதாகக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க :  நாமக்கல்லில் புத்தக திருவிழா.. வாசகர்களை கவரும் லட்சக்கணக்கான புத்தகங்கள்

பணம் வருவதற்கு 3 நாட்கள் தாமதமான நிலையில், ஆத்திரமடைந்த கடத்தல் கும்பல் சரவணனை கடுமையாக அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக சரவணன் உயிரிழந்தார். உடலை அறையிலேயே போட்டு விட்டு அங்கிருந்து கும்பல் தப்பிச் சென்று விட்டது. அறையில் சடலம் இருப்பதைப் பார்த்த விடுதி மேலாளர் இதுகுறித்து வாழவந்திநாடு கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணகுமாருக்கு தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விஏஓ ஆய்வு செய்ததில் சரவணன் உடலில் பலத்த காயங்கள் இருந்ததும், கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது இதுதொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் வாழவந்திநாடு போலீசாரிடம் புகார் அளித்தார். சரவணன் உடலை மீட்டு போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கொலைக்கான பகீர் காரணம் தெரியவந்தது.

சரவணனிடம், அவருக்கு தெரிந்த நாமக்கல்லை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் அணுகி பெரிய அளவில் பணம் தருகிறேன். இந்த பணத்தை நிதி நிறுவனம் மூலம் வட்டிக்கு விட்டு அதில் கிடைக்கும் வட்டி பணத்தை கமிஷன் அடிப்படையில் பிரித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார். அதன்படி முதற்கட்டமாக 20 லட்சம் ரூபாயை சரவணனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், பேசியபடி சரவணன் இந்த பணத்திற்கான வட்டிப் பணத்தை அந்த நபரிடம் கொடுக்கவில்லை என தெரிகிறது.

இதனால் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார் தொழிலதிபர், சரவணனும் ஏதேதோ சாக்கு சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளார். பலமுறை கேட்டும் பணத்தைக் கொடுக்காததால் ஆத்திரமடைந்த அந்த தொழிலதிபர் சரவணனைக் கடத்தி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் மனைவி சத்யா, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்று கணவர் உடலை பார்த்து கதறி அழுதார். மருத்துவமனை முன்பு ஏராளமான உறவினர்கள் திரண்டதால் அப்பகுதியே பதற்றமாக காணப்பட்டது. பாதுகாப்புக்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பைனான்ஸ் அதிபர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

First published:

Tags: Crime News, Murder, Namakkal