Home /News /namakkal /

வளர்ப்பு நாய்க்கு 9ம் ஆண்டு நினைவு தினம்.. நாயின் படத்தின் முன்பு படையல் போட்டு வழிபாடு நடத்திய தம்பதி..

வளர்ப்பு நாய்க்கு 9ம் ஆண்டு நினைவு தினம்.. நாயின் படத்தின் முன்பு படையல் போட்டு வழிபாடு நடத்திய தம்பதி..

காட்சிப்படம்

காட்சிப்படம்

Namakkal | நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்கு படையல் போட்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    கோனேரிப்பட்டியை சேர்ந்த நடராஜன் - வளர்மதி தம்பதி தங்கள் வீட்டில் ஜானி என்ற நாயை 13 ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்துள்ளனர். இந்த நாய் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த நிலையில், ஆண்டுதோறும் நினைவு தினம் அனுசரித்து வருகின்றனர். அந்த வகையில் 9ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாயின் படத்தின் முன்பு பிஸ்கட், முறுக்கு, சாதம் உள்ளிட்டவற்றை படையல் போட்டு, கற்பூரம் காண்பித்து வழிபாடு நடத்தினர்.

    நன்றியுள்ள பிராணி நாய் என்பார்கள், அப்படி 13 ஆண்டுகளாக நன்றியோடு மகன் போல் வாழ்ந்த ஜானி என்ற நாய்க்கு படையல் போட்டு 9ம் ஆண்டாக கும்பிட்ட ராசிபுரம் தம்பதியினர்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனேரிப்பட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் 69;பஸ் கம்பெனி மேலாளர். இவரின் மனைவி வளர்மதி, 58.

    ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த உறவினர் ஒருவரின் மூலமாக குட்டியாக இருக்கும் போதே ஜானி என்ற நாய்க்குட்டியை வாங்கி வந்தார்  நடராஜன். நாய் இருந்தால் வீட்டிற்கு ஒரு பாதுகாப்பாய் இருக்கும் என்பதால் அதனை வளர்த்து வந்தார் நடராஜன். ஆண்டுகள் நகர, நகர ஜானியின் பழக்க, வழக்கம் கணவன், மனைவி இருவருக்கும் பிடித்துப் போனதால் அதை செல்லப்பிள்ளையாக மகனை போல் பாவித்து வளர்த்து வந்தனர். நாய் என்று சொன்னால் கோபப்படும் இநத தம்பதியினர் ஜானி என்றே அழைக்கச் சொல்கின்றனர்.

    Read More : எல்லாவற்றுக்கும் மாமியார், மாமனாரிடம் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டுமா? - டிவிட்டரில் பொருமிய பெண்ணின் பதிவு வைரல்..


    ஏதேனும் மனது கஷ்டமாக இருக்கும் போது அழுகிறோம் என்றால் கண்ணீரை துடைத்து, முத்தம் கொடுக்குமாம்.எனது கணவர் என்னை அடிக்க விளையாட்டாக கையை ஓங்கினால் கூட ஜானி என்னை பாதுகாக்கும் என்கிறார் வளர்மதி.ஜானிக்கு 12 வயது இருக்கும் போது உடலில் புண் ஏற்பட்டது.

    இதில் கஷ்டப்பட்டதால் ஜானியை உறவினர் ஒருவரின் வீட்டில் விட்டு வந்தார் நடராஜன். அன்று நாள் முழுவதும் ஜானியும் சாப்பிடவில்லையாம், நடராஜனும் சாப்பிடவில்லையாம். அடுத்த நாளே ஜானியை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் நடராஜன். இந்த நிலையில், ஜானிக்கு 13 வயது இருக்கும் போது, வயது முதிர்வு காரணமாக வீட்டின் பின்புறம்  சத்தமிட்டபடி இருந்தது.

    அந்த சமயத்தில் வளர்மதி வீட்டில் இல்லாமல் அருகே இருந்துள்ளார். அப்போது ஜானி கத்துவது அம்மா, அம்மா, அம்மா என்று அழைப்பதாக இருந்ததாக கண்ணீர் மல்க கூறுகிறார் வளர்மதி. ஜானி இறந்த இடத்தில் சீதாப்பழம் மரம் நட்டோம். நன்கு காய் பிடித்து வருகிறது.  ஜானி இறந்து 9 ஆண்டுகள் ஆகிறது. அது எங்கும் செல்லவில்லை. இன்றும் பாதுகாத்து வருவதாக நம்பிக்கையோடு கூறுகின்றனர் தம்பதியினர்.

    சீதாப்பழம் மரம் அருகே ஆண்டுதோறும் ஜானிக்கு படையில் போட்டு கும்பிட்டு வருகின்றனர்.9ம் ஆண்டான இன்று வழக்கம் போல் தேங்காய், பழம், முறுக்கு, பிஸ்கெட், சாப்பாடு என ஜானி விரும்பி சாப்பிடும் உணவை இலையில் படையல் போட்டு இறந்துபோன மனிதர்களுக்கு எப்படி படையல் போடுவோமோ அப்படியே ஜானிக்கும் படையில் போட்டு கும்பிட்டு வருகின்றனர். இதை ஆண்டுதோறும் செய்து வருகிறோம் என தம்பதியினர் தெரிவித்தனர்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி