நாகப்பட்டினம் மாவட்டம் பண்ணத்தெருவில் உள்ள அருள்மிகு பண்ணார பரமேஸ்வர கோயிலில் இருந்த வெண்கல விநாயகர் சிலை ஒன்றை 40 ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்கள் திருடிவிட்டதாக கோவில் காவலாளி பாலு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து பாண்டிச்சேரி ஆராய்ச்சி நிறுவனத்தை அணுகி காணாமல் போன விநாயகர் சிலையின் புகைப்படத்தை பெற சென்ற போது, அங்கு சிலை கடத்தல் தடுப்பு போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது பண்ணார பரமேஸ்வர கோவிலில் இருந்து விநாயகர் சிலை மட்டுமின்றி சோமஸ்கந்தர், சந்திரசேகர அம்மன், நடன சம்பந்தர், பிடாரி அம்மன், நின்ற சந்திரசேகர், நின்ற விநாயகர், தேவி, அஸ்திரதேவர் சிலை உட்பட 11 சிலைகள் திருடப்பட்டிருப்பது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. இந்த சிலைகள் கோவிலில் இருந்து ஒவ்வொன்றாக திருடப்பட்டதும் தெரியவந்துள்ளது.
ஆனால், 11 கோவில் சிலை திருடப்பட்ட விவகாரம் கோவில் நிர்வாகத்தினர் யாருக்குமே அதுவரை தெரியவில்லை. ஒரு சிலை மட்டுமே காணாமல் போனதாக அவர்கள் இருந்து வந்துள்ளனர். இதனையடுத்து கோவிலில் திருடப்பட்ட சிலை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், இந்திய மற்றும் தென் கிழக்கு ஆசிய கலை படைப்பான தேவி சிலை நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியத்தில் இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் இந்த தேவி சிலையை 1970 மற்றும் 1973 ஆம் ஆண்டின் இடைக்காலத்தில் 50,000 டாலருக்கு விற்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதே போல இந்த கோவிலில் இருந்து திருடப்பட்ட மற்றொரு சிலையான விநாயகர் சிலை அமெரிக்காவின் நார்டன் சைமன் மியூசியத்தில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த சிலை 1972ஆம் ஆண்டு விற்கப்பட்டுள்ளது.
மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இந்த சிலைக்கு சர்வதேச சந்தையில் 3 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு என விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சிலை கடத்தலுக்கு பின்னணியில் பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரின் தொடர்பு இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சந்தேகித்துள்ளனர்.
இந்த கோவிலில் இருந்து திருடப்பட்ட வெண்கல உலோக தேவி சிலை மற்றும் விநாயகர் சிலை ஆகியவை அமெரிக்காவில் இருப்பதால் கோரிக்கை மனுக்களை அனுப்பி சிலைகளை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவதாக சிலை கடத்தல் தடுப்புபிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
Also see... இடுக்கியில் நிலச்சரிவு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்
விரைவில் அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பண்ணார பரமேஸ்வர கோவிலில் வைக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மீதமுள்ள 9 சிலைகள் எங்கு உள்ளன என்பது குறித்தும் அவற்றை மீட்பது குறித்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News, Idol smuggling case, Madurai, Nagapattinam