Home /News /nagapattinam /

ஊருக்கு பஸ் வசதி இல்லாததால் பெண் கிடைக்கவில்லை... முன்னாள் முதல்வர் பிறந்த ஊருக்கு அருகாமையில் உள்ள கிராம இளைஞர்கள் வேதனை!

ஊருக்கு பஸ் வசதி இல்லாததால் பெண் கிடைக்கவில்லை... முன்னாள் முதல்வர் பிறந்த ஊருக்கு அருகாமையில் உள்ள கிராம இளைஞர்கள் வேதனை!

பஸ் வசதி கேட்கும் கிராம மக்கள்

பஸ் வசதி கேட்கும் கிராம மக்கள்

Thirukuvalai Village : நாகை மாவட்டம் திருக்குவளையில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்த ஊருக்கு மிக அருகாமையில் உள்ள கிராமத்தினர் பேருந்து வசதி இல்லாமல் இன்னலை அனுபவித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Nagapattinam, India
    மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் பிறந்த ஊரான திருக்குவளை அருகே பஸ் வசதி இல்லாததால் 4 கிராம  மக்கள் அவதிக்கு உள்ளாகின்றனர்.

    நாகை மாவட்டம் திருக்குவளையில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி பிறந்த ஊருக்கு மிக அருகாமையில், மேலவாழக்கரை ஊராட்சி ஏர்வைக்காடு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றி ராமன்கோட்டகம், தெற்குப்பனையூர், நாட்டியிருப்பு , வல்லவிநாயன்கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த 4 கிராமங்களில் வசிப்பவர்கள் மருத்துவ சிகிச்சைக்காகவும், மாணவ, மாணவிகள் மேல்நிலைப் படிப்புக்காகவும் அருகில் உள்ள  திருக்குவளைக்கு சென்று வருகின்றனர். ஆனால் இந்த  கிராமங்களுக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால் நாகை , திருவாரூர், திருத்துறைப்பூண்டி மற்றும் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்வதற்கு சுமார் 5 கிலோமீட்டர் தூரம் உள்ள திருக்குவளைக்கு நடந்து வந்து பஸ்ஸில் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவசர காலங்களில்  ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால் 200 முதல் 300 ரூபாய்  வரை செலவாகும் சூழலில்  ஏழை எளிய கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    மாணவர்கள் அவதி


    பஸ் வசதி இல்லாததால் மாணவ மாணவிகள் பள்ளிக்கு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர் கடும் வெயிலில் சைக்கிளிலும், காலில் செருப்பு கூட இல்லாமல் பல மாணவர்கள் நடந்தே பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேலும் அருகில் உள்ள ஊர்களுக்கு வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் உபகரங்களை தலையில் சுமந்து செல்கின்றனர். இந்த கிராம மக்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த  பொதுமக்கள் கூறியதாவது,  எங்கள் கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லாததால் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து திருக்குவளைக்கு சென்று அங்கிருந்து பேருந்து ஏறி செல்லும் அவல நிலை உள்ளது. ஆட்டோவில் செல்ல வேண்டும் என்றால் 250 லிருந்து 300 ரூபாய் வரை தேவைப்படுகிறது. நாங்களே 100 நாள் வேலை பார்த்து தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கும் நிலையில் எப்படி ஆட்டோவில் போக முடியும் என கேள்வி  எழுப்பி உள்ளனர். மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் தினந்தோறும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    பஸ் வசதி கேட்டு கோரிக்கை வைத்த ஊர் பொதுமக்கள்


    குறிப்பாக நோயாளிகள் , முதியவர்கள் , கர்ப்பிணிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் வீட்டுக்கு நடந்து செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர். பேருந்து வசதி இல்லாத எங்கள் கிராமத்தில் உள்ள வாலிபர்களுக்கு பெண் கொடுக்க மறுக்கின்றனர். பெரும்பாலானோர் ஊரையே காலி செய்துவிட்டு வெளியூருக்கு சென்று விட்டனர்.

    மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இக்கிராமத்தில் பேருந்து வசதி இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயமும் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கும் முன்பு தங்கள் பகுதிக்கு மினி பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில்  தற்போது  நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் டவுன் பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம்  அளிக்கப்பட்டுள்ள சூழலில் அரசு பேருந்து இயக்கினால், பெண்களுக்கு  பெரிதும் பயனாக இருக்குமென அப்பகுதியினர் தங்களது கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

    பொதுமக்கள் கோரிக்கை


    முன்னாள் தமிழக முதல்வர் பிறந்த ஊருக்கு அருகாமையில் உள்ள கிராமங்களுக்கு பேருந்து வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதியுறும் நிலையில் , தமிழக அரசு கிராம மக்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    செய்தியாளர் : பாலமுத்துமணி
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Nagapattinam

    அடுத்த செய்தி