அதிமுக கூட்டணியில் தற்போது நீடிக்கவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் அக்கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2026ல் பாமக தலைமையில் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறினார்.
மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு, பாமக செயல் திட்டங்கள் மற்றும் கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகளிடம் உரையாற்றினார்.
முன்னதாக, அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் தொடங்கப்படும் புதிய தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்குவதற்கான தனிச் சட்டத்தை தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வரும் நீர் மேலாண்மை திட்டத்தை அதிமுக ஆட்சியில் ஓரளவுக்கு செயல்படுத்தினர். ஆனால் திமுகவினர் அதனை கண்டு கொள்ளவில்லை.
நீர் மேலாண்மைக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அத்தொகையை ஆண்டிற்கு ரூ.20 ஆயிரம் கோடி செலவு செய்தால்தான் அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். டெல்டா மாவட்டங்களில் கஞ்சா, குட்கா போதைப்பொருள்கள் புழக்கம் அதிகரித்துள்ளதைத் தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை தடுப்புப்பிரிவில் போதுமான காவலர்கள் இல்லாததால் இந்த குற்றங்கள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. எனவே, போதை தடுப்பு பிரிவுக்கு 20,000 போலீஸாரை பணியமர்த்தி தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இல்லையெனில், இளைய சமுதாயம் சீரழிந்து விடும்.
இதையும் படிங்க: 5 மின் இணைப்பு இருந்தால் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்குமா? - அமைச்சர் விளக்கம்
இன்றைய சூழலில் பாமக எந்த கூட்டணியிலும் இல்லை. 2026-இல் பாமக தலைமையிலான கூட்டணி அமைப்பதற்கான வியூகங்களை 2024 மக்களவைத் தேர்தலில் வகுக்க உள்ளோம். மக்களவைத் தேர்தல் குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.
மேலும், பயிர்க்காப்பீடுத் திட்டத்தில் பாகுபாடு காட்டப்படுவதை தவிர்த்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் முழு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அன்புமணி ராமதாஸ், காவிரி உபரி நீர் நேரடியாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் 10 இடங்களில் தடுப்பணை கட்டினால் 50 டிஎம்சி தண்ணீர் வரை சேமிக்க முடியும். இதனை நிறைவேற்றுவதற்கு தமிழக அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
செய்தியாளர்: கிருஷ்ண குமார்- மயிலாடுதுறை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AIADMK Alliance, Anbumani, Mayiladuthurai, PMK