இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையானது எனக் கருதப்பட்ட பூம்புகார், 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கக் கூடும் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களில் ஒன்றாகக் கருதப்படும் பூம்புகாருக்கு காவேரிப்பூம்பட்டிணம் என்ற பெயரும் உண்டு. 2, 500 ஆண்டுகளுக்கு முன்னர், சோழ மன்னர்கள் காலத்தில் நிறுவப்பட்டதாகக் கருதப்பட்ட இந்த நகரம், இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே பழமையான துறைமுக நகரமாக இருக்கக்கூடும் என பாரதிதாசன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
NIOT எனப்படும் தேசிய கடல் தொழில்நுட்ப மையத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில், தற்போதைய கடற்கரையில் இருந்து கடலில் 40 கி.மீ தொலைவில், நீருக்கு அடியில் 50 முதல் 100 மீட்டர் ஆழத்தில் துறைமுக நகரம் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஒரு துறைமுகம், கப்பல் நிறுத்துமிடம், மனிதக் குடியமர்வு, கலங்கரை விளக்கம் ஆகியவையும் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 11 கி.மீ நீளமும், இரண்டரை கி.மீ அகலமும் கொண்டதாக இந்த துறைமுக நகரம் இருந்திருக்கலாம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்தும், தொழில்நுட்ப ஆய்வு முடிவுகளின்படி 15 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்திய செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், 6000 ஆண்டுகளுக்கு முன்னர் தற்போதைய மாயவரத்தில் கடற்கரை இருந்துள்ளது. பிறகு, கடல் கிழக்காக பின்வாங்கிய போது, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சீர்காழியிலும், 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கூரிலும் கடற்கரை இருந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன. 2,500 ஆண்டுகளுக்கு முன்னர்தான் தற்போதைய காவிரிப்பூம்பட்டிணப் பகுதியை கடல் அடைந்திருக்கிறது. மேலும் ஓராண்டு இந்த ஆய்வு நீடித்து, அதன் முடிவுகள் குமரிக் கண்டம் காணாமல் போனதற்கான வரலாற்றைக் கண்டறிவதற்கும் வழிவகுக்கலாம் எனக் கூறுகின்றனர் ஆய்வுக் குழுவினர்.
கடற்கரையில் இருந்து 40 கி.மீ தொலைவில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரம், 15,000 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கடல் மட்டம் உயர்ந்த போதும், கடல்கோளினாலும் கடலுக்குள் மூன்று இடங்களில் இடம் மாறி, பிறகு, மாயவரம் வரை தள்ளப்பட்டு, சீர்காழி, நாங்கூர் என மாறி, தற்போதைய இடத்தை அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் பல நகரங்களில் ஒன்றாக நாம் கடந்து செல்லும் பூம்புகார், 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நன்கு கட்டமைக்கப்பட்ட துறைமுக நகரமாக இருந்திருக்கிறது என்பதை நினைத்தாலே மலைப்பாக உள்ளது. வரலாற்று ஆய்வுகள் இன்னும் பல ஆச்சர்யமூட்டும் அதிசயங்களை வருங்காலங்களில் கட்டவிழ்க்கலாம்; காத்திருப்போம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.