மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வழுதலைக்குடி கிராமத்தில் கந்துவட்டி புகாரில் தாய் மகன் கைது செய்யப்பட்டனர் கோர்ட்டு உத்தரவின் பேரில் போலீசார் அவரது வீட்டை சோதனை செய்தபோது 50க்கும் மேற்பட்ட கடன் கொடுத்ததற்கான பத்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த எடமணல் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன். இவர் மெடிக்கல் நடத்தி வருகிறார். இவர் வழுதலைகுடி அக்ரஹாரத்துமேடு தெருவைச் சேர்ந்த சோலையம்மாள் என்பவரிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு 3 லட்சம் கடன் பெற்றதற்காக வீட்டை பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் கடன் பெற்று 3 வருடங்கள் ஆன நிலையில் வாசுதேவன் சோலையம்மாளிடம் ரூ. 3.5 லட்சம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அசல் வட்டியுடன் சேர்த்து 7 லட்சம் கொடுத்தால்தான் பத்திர பதிவு ரத்து செய்து தருவேன் என சோலையம்மாள் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாசுதேவன் மயிலாடுதுறை எஸ்பியிடம் புகார் அளித்தார்
அந்த புகாரில், “சீர்காழி தாலுக்கா வழுதலைகுடி அக்ரஹாரத்துமேட்டில் வசிக்கும் மாரியப்பன் மனைவி சோலையம்மாள் என்பவரிடம் கடந்த 29.03.2019 ம் தேதி ரூ. 3 லட்சம் கடன் வாங்கியிருந்தேன். மேற்படி கடனுக்கு பாதுகாப்புக்காக எனது வீட்டை கிரையம் ஒப்பந்தம் செய்து கொடுத்திருந்தேன். மேற்படி கடன் ரூ. 3 லட்சத்தையும் அதற்குரிய வட்டியையும் சேர்த்து கொடுத்து தீர்த்து விட்டேன். நான் பாதுகாப்புக்காக எழுதிக் கொடுத்திருந்த கிரைய ஒப்பந்தப் பத்திரத்தை கேன்சல் செய்து கொடுக்க வேண்டி பல முறை நேரிலும் பல நபர்கள் மூலம் சோலையம்மாளிடம் கேட்டபோதெல்லாம் செய்து தருகிறேன் என்று கூறினார். தற்போது என் மீது வழக்குத் தாக்கல் செய்துவிட்டார்.
இந்த விவரம் அறிந்து நான் கடந்த 13.6.2022 அன்று காலை 10 மணிக்கு மேற்படி சோலையம்மாளிடம் கேட்டதற்கு சோலையம்மாள் நான் வாங்கிய கடனுக்கு அன்றைய தேதியில் இருந்து 4பைசா வட்டி சேர்த்து ரூ.7 லட்சம் கொடுத்தால் வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு பத்திரத்தை ரத்து செய்வதாகவும் இல்லை என்றால் உன் வீட்டை என்னிடம் கொடுத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறு என்றும். இல்லையென்றால் வீட்டைவிட்டு காலி செய்து உன் குடும்பத்தை தெருவில் நிறுத்தி விடுவதாக மிரட்டுகின்றார்.
மேலும் இதைப் போல் ஊரில் நிறைய பேரிடம் கந்து வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். இந்த வட்டியால் வருஷபத்து கிராமத்தைச் சேர்ந்த சம்பத் குமார் என்பவர் மன உளைச்சலால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கொடுத்த கடனை தீர்த்துவிட்ட என்னிடம் அதிக கந்துவட்டி கேட்டு கொடுமை செய்து பத்திரத்தை திருப்பி தர மறுத்து மிரட்டும் மேற்படி நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கடந்த 20ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்திருந்தார்.
Also see... ஆசைக்கு இணங்காததால் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்டு மிரட்டல்.. இசையமைப்பாளர் மீது பெண் பகீர் புகார்
அதனை தொடர்ந்து சீர்காழி காவல் துணைக் கண்காணிப்பாளர் லாமெக், இன்ஸ்பெக்டர் மணிமாறன் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் சோலையம்மாள் மீது கந்துவட்டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டை சோதனை செய்வதற்கு சீர்காழி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நேற்று மாலை சோலையம்மா வீட்டில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் பலருக்கு கடன் கொடுத்த வகையில் 25 பத்திரங்கள்.16 வெறும் கையெழுத்து மட்டும் பெற்றதும்(pro note), 11 மூல பத்திரங்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பத்திரங்கள் சுமார் கோடிக்கணக்கான மதிப்பிலான பத்திர ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தொடர்ந்து விசாரணை செய்த போலீசார் இவர் பல்வேறு நபர்களிடம் கந்து வட்டிக்கு பணம் கொடுத்தது தெரியவந்தது இதனை அடுத்து பாதிக்கப்பட்டவர்களிடம் புகார்களை பெற்ற போலீசார் சோலையம்மாளையும் அவரது மகன் வீரபாண்டியன் ஆகியோரையும் கைது செய்து மயிலாடுதுறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர் . கைப்பற்றிய அனைத்து பத்திரங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Interest rate hike, Mayiladuthurai, Sirkazhi