இஸ்லாமிய பெண்களை குறிவைத்து தங்க நகைகளை மோசடி செய்த நகைகளை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா எலந்தங்குடியை சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி மனைவி பாத்திமா நாச்சியா. இவர் 2011-ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் தங்க நகை பாதுகாப்பு என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இவர் தனது நகை பாதுகாப்பு நிறுவனத்தில் நகையை வைப்பவர்களுக்கு பவுனுக்கு ரூ.1,500 தருவதாகவும் 15 நாள்களில் நகையை திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பி கடந்த 2011-ஆம் ஆண்டு திருவாளபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பேகம் மன்சூர் என்பவர் 350 பவுன் தங்க நகையை பாத்திமா நாச்சியாவிடம் கொடுத்துள்ளார். இதனை அறிந்த சிதம்பரம், புத்தூர், சீர்காழி, வடகரை, கிளியனூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் தங்களது நகையை பாத்திமா நாச்சியாவிடம் கொடுத்து பணம் பெற்றுள்ளனர்.
3 மாதங்களுக்கு சொன்னபடி 15 நாள்களில் நகைகளை திருப்பிக் கொடுத்த பாத்திமா நாச்சியா, பின்னர் நகைகளை திருப்பித் தராததால் நகைகளை கொடுத்த பெண்கள் தொடர்ந்து தங்களது நகைகளை திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியதை அடுத்து பாத்திமா நாச்சியா மயிலாடுதுறையில் குடியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு கும்பகோணத்தில் தனது வீட்டிற்கு குடிபெயர்ந்து உள்ளார்.
இதுகுறித்து கடந்த 2013-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இந்த மோசடியில் தொடர்புடைய பாத்திமா நாச்சியா, அவரது கணவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலையாகினர். இந்நிலையில் 12 ஆண்டுகள் ஆகியும் நகை திரும்ப கிடைக்காததால் பாதிக்கப்பட்ட பெண்கள் நேற்று முன்தினம் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் சீர்காழி போலீஸார் சம்மன் அனுப்பி பாத்திமா நாச்சியாவை விசாரணைக்கு அழைத்தனர்.
விசாரணைக்காக சீர்காழி காவல் நிலையத்தில் பாத்திமா நாச்சியா ஆஜரானதை அறிந்து அங்கு திரண்ட இஸ்லாமிய பெண்கள் தங்களது நகைகளையும் மீட்டுத்தர வலியுறுத்தினார். இதையடுத்து, போலீஸார் அறிவுறுத்தலின்படி பாத்திமா நாச்சியாவிடமிருந்து 3,042 பவுன் தங்க நகைகளை மீட்டு தரக்கோரி 15 இஸ்லாமிய பெண்கள் புகார் அளித்தனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திரண்டு புகார் அளித்துள்ளனர். அவர்களை நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து காவல் துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா கூறுகையில், இந்த வழக்கு கடந்த 2011-ஆம் ஆண்டிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் இங்கும் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து, உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mayiladuthurai