Home /News /mayiladuthurai /

கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் வெள்ளம்.. 300 ஏக்கர் விவசாய நிலம் தண்ணீரில் மூழ்கியது

கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரால் வெள்ளம்.. 300 ஏக்கர் விவசாய நிலம் தண்ணீரில் மூழ்கியது

வெள்ளம்

வெள்ளம்

300 ஏக்கர் பரப்பளவிலான பருத்தி,சோளம்,வெண்டை கத்தரி, உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் மற்றும் முல்லை, மல்லி, செவ்வந்தி உள்ளிட்ட பூச்செடிகள் முற்றிலுமாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.

சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள உபரி நீரால் 10க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.   300 ஏக்கர் பரப்பிலான பருத்தி,காய்கறிகள், பூச்செடிகள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் படகில் சென்று பார்வையிட்டார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரி நீர் கடந்த மூன்று தினங்களாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி   திருச்சி அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி  உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

இந்த நீரானது சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதிக்கு நேற்று வந்தடைந்தது. தொடர்ந்து இந்த நீரானது  பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது. நேற்றிலிருந்து வெள்ள நீர் அதிகரித்து வருவதால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள ஆற்றங்கரை தெரு, ஆற்றின் படுகையில் அமைந்துள்ள நாதல்படுகை உள்ளிட்ட பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

அதேபோல் நாதல்படுகை மற்றும் முதலைமேடு திட்டு கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த 300 ஏக்கர் பரப்பளவிலான பருத்தி,சோளம்,வெண்டை கத்தரி, உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் மற்றும் முல்லை, மல்லி, செவ்வந்தி உள்ளிட்ட பூச்செடிகள் முற்றிலுமாக வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. நேற்று முதல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாலும் மேற்கொண்டு சில தினங்களுக்கு தண்ணீர் குறைவதற்கான வாய்ப்பு இல்லாததாலும் பயிர்களை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதையும் படிங்க: விசிக பிரமுகர் காருக்கு தீ வைப்பு.. அதிமுக பிரமுகரின் ஆட்டோக்கள் சூறையாடல்.. கும்பகோணத்தில் பரபரப்பு

மேலும் இருபதுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்துள்ளதால் சுடாத செங்கற்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் கொள்ளிடம்,நாதல்படுகை மற்றும்  முதலைமேடு திட்டு ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதனை தொடர்ந்து தண்ணீர் சூழ்ந்துள்ள வீடுகளையும் பயிர்களையும் பார்வையிட்ட அவர்கள்,  அங்குள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தினர்.  மேலும் தற்பொழுது 1.25 லட்சம் கன அடி தண்ணீர் வரும் நிலையில்  1.40 லட்சம் கன அடி தண்ணீர் வருவதற்கான வாய்ப்பு உள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
Published by:Murugesh M
First published:

Tags: Flood, Mayiladuthurai

அடுத்த செய்தி