மேட்டூரில் திறக்கப்பட்டுள்ள 2.10லட்சம் கன அடி தண்ணீர் சீர்காழி அருகே கொள்ளிடம் வழியே கடலில் கலப்பதால், கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்து கரையோர கிராமங்களில் பொதுமக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையில் இருந்து சுமார் 2.10லட்சம் கனஅடி வரை உபரி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் கட்டமாக அணைக்கரையிலிருந்து 1லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆறு மூலம் பழையாறு என்ற இடத்தில் கடலில் சென்று கலந்து வருகிறது.
படிப்படியாக நாளை பிற்பகலுக்குள் 2 லட்சம் கனஅடி தண்ணீர் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்ட கொள்ளிடம் கரையோர கிராமங்களில் தண்ணீர் உட்புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சீர்காழி தாலுகாவில் அளக்குடி நாதல்படுகை முதலைமேடு பாலூரன் படுகை, வெள்ளைமணல் உள்ளிட்ட கிராமங்கள் கொள்ளிடம் கரைக்கு உட்புறம் உள்ள திட்டுப்பகுதியில் அமைந்துள்ளது.
இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தற்காலிக தங்கு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. 2005 மற்றும் 2018ம் ஆண்டுகளில் கொள்ளிடம் ஆற்றில் இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் சென்றபோது அளக்குடி என்ற இடத்தில் கரை உடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அளக்குடியில் மாவட்ட ஆட்சியர் திருமதி லலிதா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி நிஷா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அவர்கள் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பயிற்சி பெற்ற தன் ஆர்வலர்கள் மற்றும் காவலர்கள் 60 பேர் கொள்ளிடத்திற்கு வருகை தந்துள்ளனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக அவர்கள் ஆயத்தமாவதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு அறிவுரைகளை வழங்கினார்.
இதையும் படிங்க: தர்மபுரியில் வெள்ளத்தில் சிக்கிய முதிய தம்பதியினரை கயிறுகட்டி மீட்ட தீயணைப்பு துறையினர்...
கொள்ளிடக்கரையில் உடைப்புகள் ஏற்படாமல் தடுக்கவும், பொதுப்பணித் துறை சார்பில் மணல் மூட்டைகளை சேமித்து வைக்க அப்போது அவர் உத்தரவிட்டார். செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் தற்காலிக முகாம்களுக்கு பொதுமக்கள் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.