Home /News /mayiladuthurai /

செல்லப்பிராணி மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து இரங்கல்.. கல்லறை எழுப்ப திட்டமிடும் பாசக்கார குடும்பத்தினர்..

செல்லப்பிராணி மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து இரங்கல்.. கல்லறை எழுப்ப திட்டமிடும் பாசக்கார குடும்பத்தினர்..

சச்சின் பிரிவில் வாடும் டீக்கடை ராஜேந்திரன்..

சச்சின் பிரிவில் வாடும் டீக்கடை ராஜேந்திரன்..

Mayiladuthurai | மயிலாடுதுறையை சேர்ந்த போலீஸ் குடும்பத்தினர், இறந்து போன தங்களின் வளர்ப்பு நாய்க்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்ததுடன், அதன் நினைவாக கல்லறை எழுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai | Tamil Nadu
    குடும்ப உறுப்பினராக வலம்வந்த 'சச்சின்" என்ற தங்களின் வளர்ப்பு நாய் திடீரென இறந்து போன நிலையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்து  இரங்கல் தெரிவித்த மயிலாடுதுறையை சேர்ந்த போலீஸ் குடும்பத்தினர், தங்களின் இறந்துபோன நாய்க்கு கல்லறை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

    மயிலாடுதுறை மகாதானபுரத்தைச் சேர்ந்தவர்கள் ஹரிபாஸ்கர்-கார்குழலி தம்பதியினர். இவர்கள் இருவருமே காவல்துறையில் வேலை பார்க்கின்றனர். ஊருக்கே காவல் பணியாற்றும் இவர்களின் வீட்டையும், இவர்களது இரண்டு குழந்தைகளையும் காப்பது என்னவோ இவர்கள் செல்லமாக வளர்க்கும் நாய்கள்தான். இவர்கள் தங்கள் வீட்டில் 4 நாய்களுக்கும் வீட்டின் மாடிக்கு கீழே பிரத்யேக அறைகளை அமைத்துத்தந்து, அவற்றுக்கு செல்லப்பெயரிட்டு பராமரித்து வருகின்றனர்.

    அதிலும் குறிப்பாக 'சச்சின்" நாய் இவர்களின் செல்லப்பிள்ளையாகவே மாறியிருந்தது. தினசரி காலை 5.30 மணிக்கே கதவைத் தட்டி, உரிமையாளர்களை எழுப்பிவிடும் சச்சின், வெளிக்கதவைத் திறந்து விட்டதுமே நேராக செல்வது வீட்டின் அருகில் ஓடும் வாய்க்காலுக்குத்தான். அங்கு சென்று உற்சாக குளியல் போட்டுவிட்டுதான் வீடு திரும்பும். ஹரிபாஸ்கர் குடும்பத்தினருக்கு மட்டுமின்றி அப்பகுதி மக்களுக்கும் செல்லப் பிள்ளையாக இருந்துள்ளது சச்சின். குளித்துவிட்டு வரும்போது அப்பகுதியில் டீக்கடைக்காரர் நாள் தவறாமல் வைக்கும் 'பன்"னை காலைச்சிற்றுண்டியாக சாப்பிட்டுவிட்டு, சாலையைக் கடந்து வீட்டுக்கு வருவது சச்சினின் வழக்கம்.

    Read More : குழந்தை அழுவதை பார்த்து யானை செய்த செயலால் திக்குமுக்காடிய பார்வையாளர்கள்..


    வழக்கம்போல், நேற்றுமுன்தினம் வாய்க்காலுக்கு சென்று குளித்துவிட்டு, வீடு திரும்பும்போது சாலையைக் கடக்க முயன்ற சச்சினை அப்பகுதி வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சிறிது நேரத்திலேய சச்சின் பரிதாபமாக உயிரிழந்தது. இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். இதையடுத்து, சச்சினின் உடலை மீட்டு, நல்லடக்கம் செய்த ஹரிபாஸ்கர், சச்சினோடு தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைதளங்களில் பகிர்ந்து தங்கள் சோகத்தை வெளிப்படுத்தியதோடு, சச்சனின் மறைவுக்கு தெரு வாசலில் இரங்கல் பேனரும் வைத்துள்ளார்.

    தாங்கள் செல்லமாக வளர்த்த சச்சினுக்கு, புதைத்த இடத்தில் தங்கள் குழந்தைகளின் விருப்பப்படி கல்லறை அமைக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளளார். சச்சினை பிரிந்த அதோடு வளர்ந்த பிற நாய்களும் ஒருநாள் முழுவதும் இரை எடுத்துக்கொள்ளாமல் குரைத்துக்கொண்டே படுத்துக்கிடந்தது  சோகத்தை வெளிப்படுத்தியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    உற்றாரின் இறப்பை உறவினர்களே ஓரிருநாட்களில் மறந்துவிடும் நிலையில், செல்லப்பிராணியின் இழப்பை நினைந்து நினைந்து உருகும் காவல்துறை குடும்பத்தினர் பாசப்பிணைப்பை உணர்த்தி நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Mayiladuthurai, Trending, Viral

    அடுத்த செய்தி