Home /News /mayiladuthurai /

மக்களே உஷார்! லோன் வாங்கித் தருவதாக ஃபோன் செய்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய கும்பல்

மக்களே உஷார்! லோன் வாங்கித் தருவதாக ஃபோன் செய்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய கும்பல்

கைது செய்யப்பட்ட மோசடி கும்பலுடன் மயிலாடுதுறை காவல்துறையினர்.

கைது செய்யப்பட்ட மோசடி கும்பலுடன் மயிலாடுதுறை காவல்துறையினர்.

Bank Loan Scam : லோன் வாங்கித் தருவதாக ஃபோன் செய்து, தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிய கும்பல் சிக்கியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mayiladuthurai, India
    மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு அபிராமி நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். மரவாடியில் கூலி வேலை பார்க்கும் இவரிடம் கடந்த ஏப்ரல் மாதம் செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ரூ.2 லட்சம் லோன் தருவதாக கூறியுள்ளார். லோன் பெறுவதற்கு முதலில் லோன் பிராசஸிங் தொகையாக 8  ஆயிரம் ரூபாயை வங்கிக்கணக்கில் செலுத்தச் சொல்லியுள்ளார். மணிகண்டன் பணம் அனுப்பியதைத் தொடர்ந்து மறுநாள் ரூ.7,340 அனுப்ப சொல்லியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து, பல எண்களில் இருந்து பலர் மணிகண்டனை தொடர்பு கொண்டு நம்பிக்கையூட்டுவது போல பேசியுள்ளனர். லோன் தொகை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பல தவணைகளாக ரூ.67 ஆயிரத்தை வங்கிக்கணக்கில் செலுத்தியுள்ளார். இவ்வளவு பணம் கட்டியும் லோன் கிடைக்காததால் வெறுப்படைந்த மணிகண்டன், இதுவரை கொடுத்த பணத்தை திரும்பத்தரும்படி கேட்டிருக்கிறார். உங்கள் பெயரில் வங்கிக்கணக்கு தொடங்கியிருப்பதால், அதனை கேன்சல் செய்ய ரூ.10,000 கட்டவேண்டும் என கேட்டு வாங்கியுள்ளனர்.

    பாலியல் அத்துமீறல்.. வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்றுவிடுவேன் என மிரட்டிய போலி டாக்டர்!

    அதன்பின்னர் பணத்தை திரும்பக் கேட்டபோது, ஐ.டி பைல் செய்வதற்காக ரூ.11,700  கட்ட வேண்டும் என்று வாங்கியுள்ளனர். மொத்தமாக மணிகண்டனிடம் இருந்து அந்த கும்பல் ஒரு லட்சத்து 12 ஆயிரத்தை வாங்கியுள்ளனர். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மணிகண்டன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெண்ணங்குழி கீழத்தெருவைச் சேர்ந்த சஞ்சய், அதே பகுதியை சேர்ந்த சித்தார்த்தன், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ரம்ஜான் தைக்கால் புதுத்தெருவைச் சேர்ந்த சையது அப்துல்கலாம் ஆகியோர் சிக்கினர்.

    அவர்கள் மூவரையும் தனிப்படை போலீஸார் கைது செய்து மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவர்களிடமிருந்து ஒரு லேப்-டாப், 14 சிறிய போன்கள், 4 ஆன்ட்ராய்டு போன்கள், 28 சிம் கார்டுகள் ஆகியன கைப்பற்றப்பட்டன.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில், இவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்டோரிடம் இதேபோல் லோன் தருவதாகக்கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது கண்டறியப்பட்டது.

    இந்த வழக்கில் சிக்கி தப்பியோடி தலைமறைவாகவுள்ள அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வெண்ணங்குழி கீழத்தெருவைச் சேர்ந்த அமர்நாத், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் புதுப்பட்டியைச் சேர்ந்த கணேஷ் ஆகிய இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். லோன் மோசடியில் ஈடுபட்ட அனைவரும் பட்டதாரி இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Musthak
    First published:

    Tags: Loan, Mayiladuthurai, Scam

    அடுத்த செய்தி