மதுரையில் குடும்ப பெண்கள் இருவரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டி தொல்லை கொடுத்த ஒரு பெண் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த கீதா என்பவரும், பழைய குயவர்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெர்மனி என்பவரும், வில்லாபுரம் பகுதியை சேர்ந்த சித்திரை அழகு (42) மற்றும் காமராஜபுரத்தை சேர்ந்த லட்சுமி (65) ஆகியோரிடம் இருந்து தலா 50 ஆயிரம் ரூபாயை கடனாக பெற்றுள்ளனர். பணம் கொடுக்கும் போதே வட்டி தொகையாக 10 ஆயிரம் ரூபாயை பிடித்தம் செய்து கொண்டு 40 ஆயிரம் ரூபாயை மட்டுமே கடனாக கொடுத்துள்ளனர். தினமும் ஆயிரம் ரூபாய் வீதம் ஐம்பது நாட்களுக்குள் கட்டுமாறு வற்புறுத்தி உள்ளனர்.
குடும்ப வறுமை காரணமாக கடன் பெற்றிருந்தாலும், அந்த தொகைக்கான வட்டியையும், மொத்த பணத்தையும் இருவரும் செலுத்திய பின்னரும், கூடுதலாக வட்டி பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். கடன் கொடுத்த சித்திரை அழகு, லட்சுமி மற்றும் வில்லாபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் (31) ஆகியோர் கடன் பெற்ற கீதா மற்றும் ஜெர்மனி ஆகியோரது வீடுகளுக்கு சென்று மிரட்டி தகாத வார்த்தைகள் பேசி காயப்படுத்தி உள்ளனர்.
கந்துவட்டி தொல்லை விபரீதமாகும் முன்னர் சுதாரித்த கீதாவும், ஜெர்மனியும் மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் கந்துவட்டி தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சித்திரை அழகு, லட்சுமி, மோகன்ராஜ் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.