Home /News /madurai /

"குற்றமும் கருணையும்" - காவல்துறையினரின் மனசாட்சியை உலுக்கும் நூல் வெளியீடு

"குற்றமும் கருணையும்" - காவல்துறையினரின் மனசாட்சியை உலுக்கும் நூல் வெளியீடு

 நூல் வெளியீடு

நூல் வெளியீடு

Tuticorin Files என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல் தமிழில் மிக அற்புதமாக, இலக்கிய நோக்குடன் "குற்றமும் கருணையும்" என மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Madurai, India
ஓய்வு பெற்ற டிஜிபி அனூப் ஜெய்ஸ்வாலின் தூத்துக்குடி அனுபவங்கள் குறித்து இதழியலாளர் சுதர்சன் எழுதிய "குற்றமும் கருணையும்" நூல் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது.

உத்தர பிரதேசத்தில் 1955-ம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்த அனூப் ஜெய்ஸ்வால் 1980-ல் ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வானார். அதிகார, ஆதிக்க சக்திகளுக்கு அடிபணிய மறுத்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்ட இவர், சட்டப் போராட்டம் நடத்தி மீண்டும் பணிக்கு வந்தார்.

35 ஆண்டு காலம் காவல் துறையில் பல்வேறு உயர் பொறுப்புகளை வகித்தவர், காவல்துறை இயக்குனர் எனும் நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். பணி நிறைவுக்கு பின்னர் பள்ளி மாணவர்களுக்கு இயற்பியல் கல்வி சார்ந்த எளிய கருவிகளை தன் சொந்த செலவில் செய்து பள்ளிகளுக்கே சென்று விலையின்றி வழங்கி வருகிறார்.

இத்தகைய தனித்துவமிக்க அனூப் ஜெய்ஸ்வால் தமிழகத்தில் அம்பாசமுத்திரம் சப் - டிவிஷனில் உதவி காவல் கண்காணிப்பாளர், மணிமுத்தாறு சிறப்பு காவல் படை அணி தளவாய் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த போது அவருக்கு நேர்ந்த அனுபவங்கள் குறித்து இதழியலாளர், எழுத்தாளர் வி.சுதர்ஷன் Tuticorin Files எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் நூலாக எழுதியிருந்தார்.

அந்த நூல் ஆங்கிலத்தில் வெளியாகும் முன்னரே மொழிபெயர்ப்பாளர் குமரேசன் அதனை தமிழில் - "குற்றமும் கருணையும்" - இளம் ஐ.பி.எஸ். அதிகாரியின் தூத்துக்குடி அனுபவங்கள் எனும் தலைப்பில்  மொழியாக்கம் செய்ய, காலச்சுவடு பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது.

ALSO READ |  ரேஷன் கடையில் பிரதமர் மோடி படம் எங்கே? - கலெக்டரை லெப்ட் ரைட் வாங்கிய நிர்மலா சீதாராமன்

"குற்றமும் கருணையும்" நூல் வெளியீட்டு விழா மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ஓய்வு பெற்ற டிஜிபி அனூப் ஜெய்ஸ்வால், எழுத்தாளர் சுதர்சன், பேராசிரியர் திருமலைசாமி, ஓய்வு பெற்ற காவல் அதிகாரி பழனிசாமி மற்றும் பல்வேறு காவல்துறை அதிகாரிகள், இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

நிகழ்வில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசுகையில்,"ஒரு நீதிபதி ஓய்வு பெறுவதற்கு முன்னர் வரை வழக்கறிஞர்கள் மற்றும் அவருக்கு கீழ் பணியாற்றிய அலுவலர்கள் அவருக்குரிய மதிப்பை அளிப்பதும், அவர் ஓய்வு பெற்று விட்டால் அவருக்குரிய எந்த மதிப்பும் அளிக்கப்படுவது இல்லை என்பதும் நீதித்துறையில் இயல்பாக காணக்கூடிய ஒன்று. ஆனால், ஒரு உயரதிகாரி ஓய்வு பெற்று இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் அவரைப் பற்றி எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று அவரை மதிப்பு செய்வதற்காக இவ்வளவு பேர் வந்திருக்கிறீர்கள் என்பதே அனூப் ஜெய்ஸ்வால் எவ்வளவு சிறப்பு மிக்க மனிதர் என்பதை காட்டுகிறது.

ஒரு உயர் பொறுப்பில் இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஆகச்சிறந்த ஒரு உதாரணம் அனூப் ஜெய்ஸ்வால். இனி நான் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும்அனூப் ஜெய்ஸ்வால் தான் ரோல் மாடலாக இருப்பார்.

Tuticorin Files என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூல் தமிழில் மிக அற்புதமாக, இலக்கிய நோக்குடன் "குற்றமும் கருணையும்" என மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒரு நூல்" என கூறினார்.

ALSO READ | சனாதன தர்மத்தை உருவாக்கியவர் அல்லது எழுதியவர் யார்? - விளக்கம் அளிக்கும் படி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆர்டிஐ மனு

தொடர்ந்து, அனூப் ஜெய்ஸ்வால் உடன் பணியாற்றிய அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்டோர் அவருடன் ஏற்பட்ட மறக்கவியலாத அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். மேலும், அவருக்கு பொன்னாடை போர்த்தி, மாலை அணிவித்து கவுரவித்தனர்.

நூலாசிரியர் வி.சுதர்சன் கூறுகையில்,"தமிழகத்தில் வன்முறை அதிகம் நிகழும் மாவட்டங்களில் தூத்துக்குடியும் ஒன்று. மன்னார் வளைகுடாவின் அழகிய கடலோரத்தில், அமைதியற்ற மீனவ கிராமங்கள். மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த சூழலில் பரந்த நடைமுறையோடு பொருந்தாத இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்த அனூப் ஜெய்ஸ்வால் எதிர்கொண்ட வழக்குகளை மையப்படுத்தி நிகழ்ந்த சம்பவங்களை, 100 சதவிகித உண்மைத் தன்மையுடன் ஆவணப்படுத்தி உள்ளேன். இவை முழுக்க உண்மை கதைகள். மிகைப்படுத்தபடாதவை, கற்பனை கலக்காதவை.

அவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது கொலைகாரர்கள், ஆள் கடத்தல்காரர்கள், திருடர்கள், பாலியல் தொழிலாளர்கள், கள்ளச்சாராய வியாபாரிகள், கந்து வட்டிக்காரர்கள் ஆகியோரை எவ்வாறு கையாண்டார் என்பது ஒவ்வொரு காவல்துறையினரும், தமிழக மக்களும் அவசியம் அறிய வேண்டியது" என்றார்.

ALSO READ | ரேஷன் கடைகளில் சமையல் கேஸ் சிலிண்டர் விற்பனை.. தமிழக அரசு அறிவிப்பு
 நெஞ்சில் உரமும், நேர்மைத் திறனும் கொண்ட ஒரு அதிகாரி சட்டம் அளித்துள்ள அதிகார வரம்பிற்குள் எவ்வளவு சாதனைகள் படைக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் இந்த கதைகள்.சரியான அணுகுமுறை இருந்தால், ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை மடைமாற்ற முடியும் என்பதற்கும், திருத்தவே முடியாது என கருதப்படும் நபர்களிடத்திலும் மனமாற்றம் ஏற்படுத்த முடியும் என்பதற்கும் அனூப் ஜெய்ஸ்வாலின் வாழ்வு இந்நூலில் சாட்சியாகியுள்ளது.


காவல்துறையில் பணியாற்றும் ஒவ்வொருவரின் மனசாட்சியையும் உலுக்கி எழுப்பும் ஆற்றல் கொண்ட இந்நூல், காவல்துறையில் ஒரு அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் வழிகாட்டும் வகையில் அமைந்துள்ளதாக நிகழ்வில் பங்கேற்றோர் பகிர்ந்தனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Book Fair, Madurai

அடுத்த செய்தி