Home /News /madurai /

தரையில் படுக்க வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை! - மதுரை ராஜாஜி மருத்துவமனையை கவனிக்குமா அரசு?

தரையில் படுக்க வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை! - மதுரை ராஜாஜி மருத்துவமனையை கவனிக்குமா அரசு?

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை

Madurai | மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை காரணமாக நோயாளிகளை தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கும் அவல நிலை ஏற்பட்டிருப்பது நியூஸ் 18 கள ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India
தென் தமிழக மக்கள் பல்லாயிரக்கணக்கானோரின் மருத்துவ தேவைகளை தினமும் பூர்த்தி செய்ய வேண்டிய தலையாய கடமையுடன் இயங்கி வருகிறது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. சமீப காலமாக இம்மருத்துவமனையின் குறிப்பிட்ட சில வார்டுகளில் நோயாளிகளுக்கு படுக்கை பற்றாக்குறை உள்ளதாகவும், அதனால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமமான சுழல் நிலவுவதாகவும் நியூஸ் 18 செய்தியாளர் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ராஜாஜி மருத்துவமனையில் புற்றுநோய் துறை இயங்கி வரும் 90-வது வார்டில் சில நோயாளிகளுக்கு வார்டின் நடைபாதையிலும், உதவியாளர்கள் அமரும் இருக்கையிலும் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுவது கள ஆய்வில் தெரியவந்தது.

புற்றுநோய் வார்டின் இருபுறமும் உள்ள நடைபாதையில் நோயாளிகளின் உடன் வந்திருந்த உதவியாளர்கள் பலரும் அங்குமிங்கும் அமர்ந்திருக்க, வலப்புறம் சுவரோரம் தரையில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் நோயாளிகளுக்கு தரையில் படுக்க வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களுக்கு தரையில் விரிப்பதற்குண்டான மெத்தையோ அல்லது வேறெந்த விரிப்புகளும் கூட வழங்காமல் இருந்தது அதிர்ச்சியை மேலும் அதிகரித்தது.மேலும், வார்டின் இடப்புறம் மர இருக்கை ஒன்றில் இதே போல எந்த வித விரிப்புகளும் இன்றி ஆண் நோயாளி ஒருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு ஊர்களில் இருந்து உரிய சிகிச்சையை எதிர்பார்த்து ராஜாஜி மருத்துவமனைக்கு வந்து விட்டதால், படுக்கை இல்லாவிட்டாலும் வேறு வழியின்றி சகித்துக்கொண்டு சிகிச்சை பெற்றுக்கொண்டு வருவதாக கவலையுடன் தகவல் தெரிவித்தனர் நோயாளிகள்.

இந்த விவகாரம் குறித்து ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேலிடம் விளக்கம் கேட்டோம். அதற்கு பதிலளித்தவர், "புற்றுநோய் வார்டில் தற்போது சுமார் 100 படுக்கைகள் மட்டுமே உள்ளன. தினம்தோறும் நோயாளிகளின் வருகையை பொறுத்து அருகில் உள்ள வார்டுகளையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு நிர்வாக ரீதியான உத்தரவுகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இருந்தும் எதனால் நோயாளிகள் தரையில் படுக்க வைக்கப்பட்டனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். உடனடியாக தரையில் படுக்க வைக்கப்பட்ட நபர்கள் படுக்கை வசதியுள்ள வேறு வார்டுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்டோரை கைது செய்தது ஏன்? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

புற்றுநோய் வார்டில் இடப்பற்றாக்குறை சிக்கல் நீடித்து வருவதன் காரணமாக, மதுரை பாலரெங்கபுரத்தில் பிரத்யேகமாக புற்றுநோய் சிகிச்சைக்கென தனி மையத்தை ஏற்படுத்தி தருமாறு அரசுக்கு ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த மையம் அமைக்கப்பட்டால்தான் இந்த இடப்பற்றாக்குறை சிக்கலுக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும்" என தெரிவித்தார்.

ராஜாஜி மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை அவலம் ஒருபுறம் எனில், அடிக்கடி பெயர்ந்து விழும் மேற்கூரை சுவர்களின் ஆபத்து மறுபுறம். சமீபத்தில் பெய்த மழையின் போது இதே புற்றுநோய் வார்டின் அறுவை சிகிச்சை பிரிவில் மேற்கூரை சுவர் பெயர்ந்து விழுந்து, லேப்ரோஸ்கோப்பி கருவி உள்ளிட்ட மருத்துவ கருவிகள் சேதமடைந்தன. இதே போல, குழந்தைகள் வார்டிலும் மேற்கூரை சுவர்கள் பெயர்ந்து விழுந்தன.



அதிர்ஷ்டவசமாக இந்த விபத்துக்களால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், இந்த விவகாரத்தில் மருத்துவமனையில் உள்ள கட்டிடங்களின் உண்மைநிலையை அறியும் பொருட்டு நடத்தப்பட்ட கள ஆய்வில், புற்றுநோய் வார்டு, முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ள 4 தளங்கள் கொண்ட கட்டிடத்தின் மொத்த ஸ்திர தன்மையே ஆபத்தான நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

அதுகுறித்தும் மருத்துவமனை முதல்வரிடம் கேட்கப்பட்ட விளக்கத்துக்கு, சேதமடைந்த அறுவை சிகிச்சை அரங்கில் தற்காலிகமாக சிகிச்சை நிறுத்தி வைக்கப்பட்டு, மாற்று அரங்கில் சிகிச்சை நடைபெறுவதாகவும், சேதமடைந்த கட்டிடத்தை புனரமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறை சில வாரங்களில் நிறைவு செய்யும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Also see... கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை...

தென் தமிழக மக்களின் ஒற்றை நம்பிக்கையாக உள்ள ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பாதுகாப்பான, தரமான மற்றும் தூய்மையான முறையில் சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு அரசு அதன் பிரதான கவனத்தை செலுத்த வேண்டும் என்கிற கோரிக்கை விஸ்வரூபமெடுத்துள்ளது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Madurai, Rajaji Govt Hospital

அடுத்த செய்தி