மதுரை மாவட்டம் T.கல்லுப்பட்டி ஒன்றியம் பாப்பையாபுரம் குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் அபாயகரமாக உள்ளது.
T.கல்லுப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பையாபுரம் கிராமத்தின் மத்தியில் குளம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த குளம் பல காலங்களாக அங்கு வாழும் மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.
இந்த குளத்தில் நான்கு கரைப்பகுதிகள் உள்ளன. நான்கு பக்கமும் சுற்றுச்சுவர் இருந்தது. இதில் பெரும்பகுதி சுற்றுச்சுவர் இடிந்துவிட்டது. இதனால் அவ்வப்போது மண் சரிவு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அந்த குளத்தை உபயோகிப்பதில் சிரமம் ஏற்படுவது மட்டுமல்லமல் குளத்தின் நீரை உபயோகிக்க முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது.
நான்கில் மூன்று பங்கு சுற்றுச்சுவர் ஏற்கனவே இடிந்துவிட்ட நிலையில் மீதம் உள்ள ஒருபக்க சுவர் விரிசல் அடைந்து இடிந்துவிழும் அபாய நிலையில் உள்ளது, இவ்வாறான நிலை உள்ளபொழுதும் அப்பகுதி மக்கள் இந்த குளத்தை குளிப்பதற்காகவும், துணிகளை சலவை செய்யவும் பயன்படுத்துகின்றனர்.
இந்த குளமானது பல ஆண்டுகாலமாக பாப்பையாபுரம் கிராம வாசிகளுக்கு மட்டுமல்லாமல் சுற்றுப்பகுதியில் உள்ள சிலைமலைபட்டி, காடனேரி கிரமத்தினருக்கும் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. ஆனால் இன்று நீர் வற்றி சுவர்கள் இடிந்து மோசமான நிலையில் உள்ளது, படிக்கட்டுகள் சேதமடைந்து உள்ளதால் முதியோர்கள் இந்த குளத்தை பயன்படுத்த மிகவும் சிரமமாக உள்ளது. இதனை பலமுறை முறையிட்டும் கிராம நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று பாப்பையாபுரம் கிராம வாசிகள் கூறுகின்றனர்.
மீதம் இருக்கும் சுற்றுச்சுவர் இடிந்து விபத்து ஏற்படும் முன்னரும், மழைக் காலம் தொடங்கும் முன்பாகவும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு சுற்றுச்சுவரை சீரமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அந்த சுற்று வட்டார பகுதியில் வாழும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(Madurai)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.