ஹோம் /நியூஸ் /மதுரை /

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனான தமிழக வீரர் - மதுரை சச்சின் சிவாவுக்கு குவியும் பாராட்டு!

இந்திய மாற்றுத்திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனான தமிழக வீரர் - மதுரை சச்சின் சிவாவுக்கு குவியும் பாராட்டு!

சச்சின் சிவா

சச்சின் சிவா

Madurai | இந்திய அணியை வழிநடத்துவது குறித்து நிறைய அனுபவங்கள் எனக்கு தேவைப்படுகிறது. இந்த விதத்தில் கிரிக்கெட் வீரர் தோனியின் தலைமைப்பண்பு தான் எனக்கான முன்மாதிரி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தென்னிந்தியாவில் இருந்து முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள மதுரை சச்சின் சிவாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மதுரை தெப்பக்குளம் மருதுபாண்டியர் நகரை சேர்ந்த சிவா, சிறுவயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டார். எனினும்,  கிரிக்கெட் விளையாட்டு மீதான தனது பெரும் ஆர்வத்தாலும், பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் மீதான காதலாலும் தனது பெயரை 'சச்சின் சிவா' என மாற்றிக்கொண்டார்.

பள்ளி, கல்லூரி அளவுகளில் துவங்கிய சிவாவின் கிரிக்கெட் சாதனை பயணம், அவரது 14 ஆண்டுகால தொடர் கடின உழைப்பின் மூலமாக தமிழக மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அளவில் யாரும் செய்யாத பல சாதனைகளை செய்யும் அளவுக்கு உயர்ந்தது.

இதையும் படிங்க : குரூப் 2 முதனிலைத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்... டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அப்டேட்

தேசிய போட்டிகளில் சதம் அடித்த ஒரே வீரர், வேகப்பந்து போட்டியில் 16 பந்துகளில் அரை சதம் அடித்த ஒரே வீரர் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட சர்வதேச விளையாட்டுகளில் தமிழக அணியை வழிநடத்தி வெற்றிகளை தேடித்தந்தவர் என்ற அவரது பல்வேறு சாதனைகளை கவனித்த  இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியம், 33 வயதில் அவரை தற்போது இந்திய மாற்றுத்திறனாளிகள் அணியின் கேப்டனாக தேர்வு செய்துள்ளது.

இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணிக்கு இதுவரை வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே கேப்டன் பொறுப்பு வகித்து வந்த நிலையில், தற்போது முதல்முறையாக சச்சின் சிவா பொறுப்பேற்று தமிழகத்துக்கும், மதுரைக்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் டிவிட்டரிலும், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரிலும் அழைத்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சச்சின் சிவா கூறுகையில், “இந்திய அணிக்கு தலைமை தாங்கும் முதல் தமிழக வீரராக நான் இருப்பது பெருமையாக உள்ளது. ஒருபுறம் ஜனவரியில் இந்தியா - இலங்கை இடையிலான கிரிக்கெட் போட்டி தமிழகத்தில் நடைபெற உள்ளது. மறுபுறம் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது.

இதையும் படிங்க : கோவை கார் வெடிப்பு: தமிழக போலீஸ் சிறப்பாக செயல்பட்டது - ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டு

இதுவரை மேற்கு வங்கம், டெல்லி, பஞ்சாப், காஷ்மீர் போன்ற மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் மட்டுமே இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர். முதல் முறையாக தென் இந்தியாவிலிருந்து, அதிலும் தமிழகத்திலிருந்து ஒரு வீரரை கிரிக்கெட் வாரியம் அங்கீகரித்து தேர்வு செய்துள்ளது எனில் அதற்கு, தமிழக வீரர்களின் திறமையும், அதன் மூலம் பெற்ற சாதனைகளும் தான் காரணம்.

பி.சி.சி.ஐ., கிரிக்கெட் வீரர்களுக்கு கிடைக்கும் சம்பளம், உதவிகள், ஆதரவுகள் போன்றவை மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு கிடைப்பதில்லை. அவ்வபோது போட்டிகளின் போது மட்டுமே பொருளாதார உதவிகளை பெற்று விளையாடி வருகிறோம்.

இந்திய அணியை வழிநடத்துவது குறித்து நிறைய அனுபவங்கள் எனக்கு தேவைப்படுகிறது. இந்த விதத்தில் கிரிக்கெட் வீரர் தோனியின் தலைமைப்பண்பு தான் எனக்கான முன்மாதிரி. அதனை பின்பற்றி சர்வதேச அரங்கில் இந்திய மாற்றுத்திறனாளிகள் அணியை முன்னிலையில் நிறுத்துவேன்.

சமீபத்தில் வங்கதேச அணியுடன் நடந்த சில போட்டிகளில் தோற்றுள்ளோம். இனி நடக்கும் எந்த சர்வதேச போட்டிகளிலும் இந்திய அணியை தோற்கவிடக்கூடாது என்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவேன்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க : தமிழகத்தில் முதல்முறையாக நகர, மாநகரசபை கூட்டம்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று குறை கேட்கிறார்?

மேலும் மத்திய, மாநில அரசுகள் சிறந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்களை அங்கீகரித்து விருதுகள், ஊக்கத்தொகைகள், அரசு வேலை உள்ளிட்டவைகளை வழங்கி கவுரவிக்க வேண்டும் எனவும், அப்போது தான் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் கிரிக்கெட் வீரர்களாக நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வாய்ப்புகள் அமையும் என்றும் சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.

Published by:Karthi K
First published:

Tags: Cricket, Madurai