ஹோம் /நியூஸ் /மதுரை /

அரிய பறவை இனங்கள் கொண்ட அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிப்பு.. தமிழக அரசு அரசாணை வெளியீடு

அரிய பறவை இனங்கள் கொண்ட அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் பல்லுயிர் சூழல் மண்டலமாக அறிவிப்பு.. தமிழக அரசு அரசாணை வெளியீடு

அரிட்டாபட்டி

அரிட்டாபட்டி

அரிட்டாபட்டி, மீனாட்சிபுரத்தை உள்ளடக்கிய 193.215 ஹெக்டேர் பகுதி உயிர்ப்பன்மைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதி- தமிழக அரசு அரசாணை வெளியீடு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, மீனாட்சிபுரத்தை உள்ளடக்கிய 193.215 ஹெக்டேர் பகுதியை பாரம்பரிய உயிர்ப்பன்மையம் வாய்ந்த பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் உள்ளது அரிட்டாபட்டி எனும் சிறிய கிராமம். இங்கு ஏழு பாறை மலைகள் உள்ளன. அதில் கிபி 7-8 ஆம் நூற்றாண்டில் முற்கால பாண்டியர் வடிவமைத்த குடைவரை சிவன் கோவில், இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தைய சமணர் படுகைகள் உள்ளிட்டவை தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த மலைகளை சுற்றி வற்றாத நீரூற்றுகளும், நூற்றுக்கும் மேற்பட்ட நீர் நிலைகளும், 1,200 வகையான மீன் இனங்களும், 600 வகையான பூச்சி இனங்களும், 300 க்கும் மேற்பட்ட அரிய பறவை மற்றும் விலங்கினங்களும் வாழ்ந்துள்ளன. இதில் பல அரிய உயிரினங்கள் காலப்போக்கில், சமூக விரோதிகளின் பல்வேறு நடவடிக்கைகளால் அழிந்து விட்டன.

இதன் காரணமாகவே இந்த இடம் பல்லுயிர் சூழல் மண்டலமாக அடையாளம் காணப்பட்டு, அறிவிக்கப்பட்டது. எனினும் அதற்கான அரசாணை வெளியிடப்படாமல் இருந்தது. 2020ல் அறிவிக்கப்பட்டாலும் அரசாணை வெளியாவதில் தாமதம் இருந்ததால் உடனடியாக அரசாணையை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், இன்று அரிட்டாபட்டி, மீனாட்சிபுரத்தை உள்ளடக்கிய 193.215 ஹெக்டேர் பகுதியை பாரம்பரிய உயிர்ப்பன்மையம் வாய்ந்த பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: புயல் எச்சரிக்கை கூண்டுகள்... துறைமுகங்களில் எந்த எண் கூண்டு ஏற்றினால் என்ன அர்த்தம்?

இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணைக்கு மதுரை எம்பியும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான சு.வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், உயிர்ப்ன்மைய வளமிக்க மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி, மீனாட்சிபுரத்தை உள்ளடக்கிய 193.215 ஹெக்டேர் பகுதியை உயிர்ப்பன்மைய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு மேற்கொண்டுள்ள இம்முயற்சிக்கு பாராட்டுகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Published by:Murugesh M
First published:

Tags: Madurai, Tamil Nadu government