அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில் மதுரை விஜய் ரசிகர்கள் "கலகமில்லா ஒற்றைத் தலைமையே..." என விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜயின் 48வது பிறந்த நாளையொட்டி அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், போஸ்டர்கள் வாயிலாக விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சமீப காலமாக நடிகர் விஜய்க்காக ஒட்டப்படும் போஸ்டர்களில் பெரும்பாலும் அவரை அரசியலுக்கு இழுக்கும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்று வருகின்றன. இப்படியான போஸ்டர்களில் தங்களுக்கென தனி ஸ்டைலை கொண்டவர்கள் மதுரை விஜய் ரசிகர்கள்.
மதுரை ரசிகர்கள் விஜய்யை தமிழகத்தின் முதல்வர் போலவும், முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா போலவும், கிரிக்கெட் வீரர் தோனி, பிரதமர், முதல்வர் என பல்வேறு விதமாக அவரை அரசியலில் தொடர்புப்படுத்தி போஸ்டர்கள் ஒட்டி கவனத்தை ஈர்த்துள்ளனர்.
தற்போது, தமிழகத்தின் எதிர்கட்சியான அதிமுகவில் ஒற்றைதலைமை விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி அதற்கு இன்னும் விடை கிடைக்காத நிலையில், நடிகர் விஜய்யை ஒற்றைத்தலைமை என வாழ்த்தி போஸ்டர்கள் ஒட்டியிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
மதுரை வடக்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகர் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், "கலகமில்லா எங்கள் ஒற்றைத் தலைமையே!" என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. விஜய் நடிக்கும் 66வது படத்திற்கு வாரிசு என சூட்டப்பட்டுள்ள தலைப்பு பல்வேறு யூகங்களுக்கு இடமளித்துள்ள நிலையில், இந்த ஒற்றைத்தலைமை போஸ்டரையும் இணைத்து இணையத்தில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.