Home /News /madurai /

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை கடுமையாக தாக்கி பேசிய சரவணன்... சில மணி நேரத்தில் மன்னிப்பு கேட்டு பாஜக மீது குற்றச்சாட்டு

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை கடுமையாக தாக்கி பேசிய சரவணன்... சில மணி நேரத்தில் மன்னிப்பு கேட்டு பாஜக மீது குற்றச்சாட்டு

சரவணன்

சரவணன்

PTR Palanivel thyagarajan: கடந்த ஓராண்டாகவே பாஜகவின் செயல்பாடுகளில் எனக்கு அதிருப்தி இருந்தது. பாஜகவில் எப்போழுதுமே சிறுபான்மைக்கு எதிரான போக்கு நடந்துகொண்டே உள்ளது - சரவணன்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து நேற்று பகலில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பாஜக மதுரை மாநகர் தலைவர் சரவணன், நள்ளிரவில் அவரை சந்தித்து மன்னிப்புக் கோரியதோடு பாஜகவில் இருந்து விலகப்போவதாகவும் அறிவித்தார்.

  காஷ்மீரில் பயங்கரவாதிகள் உடனான சண்டையின் போது உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்பதற்காக மதுரை விமான நிலையத்தில் அக்கட்சியினர் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவினரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  இதைத்தொடர்ந்து லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு செல்லும் வழியில் பழனிவேல் தியாகராஜன் காரை பாஜகவினர் முற்றுகையிட்டனர். அப்போது கார் மீது பாஜக மகளிர் நிர்வாகிகள் காலணியை வீசினர். முன்னதாக பிடிஆரின் விமர்சனம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சரவணன், தமிழகத்தில் பிரிவினை வாதத்தை தூண்டிவிடக் கூடியவர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்றும், அவருக்கு இருக்கும் தகுதியைவிட தங்களுக்கு கூடுதல் தகுதி உள்ளது எனவும் கூறினார்.

  இந்நிலையில், செருப்பு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சரவணன் நள்ளிரவில் சந்தித்து பேசினார். அப்போது, நடந்த சம்பவத்துக்கு சரவணன் மன்னிப்புக் கோரினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சந்தித்த சரவணன், லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றபோது, அமைச்சர் வரும்போழுது என்ன தகுதி அடிப்படையில் இங்கு வந்துள்ளீர்கள் என்று கேட்டார். அப்போது அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டோம்.

  இதையும் படிங்க: செருப்புவீச்சு சம்பவம்: பாஜகவில் இருந்து சரவணன் விலகல்.. பிடிஆர்-ஐ சந்தித்து மன்னிப்புக் கோரினார்

  அந்த நிகழ்வுகள் முடிந்து அஞ்சலி செலுத்திக்கொண்டு இருக்கும்போது நானும் எங்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தபோது விரும்பத்தகாத நிகழ்வு வெளியே நடந்துவிட்டது. அமைச்சா் தமிழில் கூறிய வாா்த்தைகளை பாஜகவினா் தவறாகப் புரிந்து கொண்டனா். இந்த சம்பவம் எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.



  12 மணி இருக்கும் என நினைக்கிறேன் இதுவரை தூக்கம் வரவில்லை. யோசித்து பார்த்தேன். நான் அடிக்கடி வந்த வீடு இது. எனது தாய் வீடு. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் போன் செய்து கேட்டேன். விழித்திருந்தார் என்றால் பார்க்கவேண்டுமென கேட்டேன். அவர் விழித்துதான் இருந்தார். அதனால் வந்து எனது வருத்தத்தை அவரிடம் தெரிவித்தேன்.

  மேலும் படிக்க: அமைச்சர் பிடிஆர் கார் மீது காலணி வீசிய விவகாரம்: ரயில் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது!

  கடந்த ஓராண்டாகவே பாஜகவின் செயல்பாடுகளில் எனக்கு அதிருப்தி இருந்தது. பாஜகவில் எப்போழுதுமே சிறுபான்மைக்கு எதிரான போக்கு நடந்துகொண்டே உள்ளது. அந்த மன உளைச்சலுடன் தான் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
  பாஜகவின் மத அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை. இனியும் பாஜகவில் தொடா்ந்து பயணிக்க இயலாது என்பதால் பாஜகவில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்க உள்ளேன் என்றாா்.

  திமுகவில் இணைவது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை. இது குறித்து உங்களிடம் (செய்தியாளர்கள்) கூறாமல் செய்யமாட்டேன். (திமுகவில் இணைவது) செய்தாலும் தப்பில்லை. திமுக தாய் வீடு தானே. நான் வந்தாலும் அதில் தப்பில்லை. 10-15 ஆண்டுகளாக நான் உழைத்த கட்சி திமுக’ என தெரிவித்தார். 
  Published by:Murugesh M
  First published:

  Tags: Madurai, Minister Palanivel Thiagarajan

  அடுத்த செய்தி