ஹோம் /நியூஸ் /மதுரை /

9 சுற்றுகள்... 860 காளைகள்... 325 வீரர்கள்.... பாலமேடு ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்!

9 சுற்றுகள்... 860 காளைகள்... 325 வீரர்கள்.... பாலமேடு ஜல்லிக்கட்டு ஹைலைட்ஸ்!

பாலமேடு ஜல்லிக்கட்டு

பாலமேடு ஜல்லிக்கட்டு

9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் மொத்தம் 860 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

பொங்கல் பண்டிகையை ஒட்டி பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகத்துடன் நடைபெற்று முடிந்தது. 23 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மதுரை மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரத்தை தொடர்ந்து பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. வாடிவாசலில் பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர், அமைச்சர் மூர்த்தி போட்டியை தொடக்கி வைத்தார்.

ஆட்சியர் அனீஷ்சேகர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள், விழாக்குழுவினர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, வாடி வாசலில் இருந்து முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதன் மீது வண்ணப்பொடியை தூவி காளையர்கள் உற்சாகமடைந்தனர்.

வாடிவாசல் வழியே காளைகள் சீறிப் பாய்ந்து வெளியேறி பார்வையாளர்களை அசரடிக்க, அவற்றை மாடுபிடி வீரர்கள் திறம்பட எதிர்கொண்டு போட்டியிட்டனர். வீரர்களின் பிடியில் சிக்காமல் நாலாப்புறமும் சுழன்ற கெத்து காட்டிய காளைகளால், பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாகமடைந்தனர்.

9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் மொத்தம் 860 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. சுழற்சி முறையில் அனுமதிக்கப்பட்ட 325 வீரர்கள், காளைகளை அடக்க போட்டியிட்டனர். சிறப்பாக விளையாடி அதிக காளைகளை அடக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

சிறப்பாக செயல்பட்ட காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு தங்க காசு, சைக்கிள், சில்வர் பாத்திரங்கள் என ஏராளமான பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.

காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி, மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. களத்தில் சோர்வடையாமல் நின்று 23 காளைகளை அடக்கிய சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் முதலிடம் பெற்றார். அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. வெற்றி களிப்பில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழரசன், அரசு வேலை வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

19 காளைகளை அடக்கிய பாலமேட்டைச் சேர்ந்த மணி 2ம் இடம் பிடித்தார். 15 காளைகளை அடக்கி பாலமேடு ராஜா மூன்றாம் பரிசை தட்டிச் சென்றார். இதேபோல் சிறந்த காளையாக கருப்பண்ணசாமி கோயில் காளை தேர்வு செய்யப்பட்டது. காளையின் உரிமையாளருகு பைக் பரிசாக வழங்கப்பட்டது.

முறைகேடுகள் ஒரு பக்கம் நடந்தாலும், வீரர்கள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக விளையாடி கவனத்தை ஈர்த்தனர்.

First published:

Tags: Jallikattu, Madurai, Palamedu, Pongal 2023