ஹோம் /நியூஸ் /மதுரை /

தமிழகத்தில் 2026-ல் பாமக ஆட்சி உறுதி - அன்புமணி ராமதாஸ் சூளுரை

தமிழகத்தில் 2026-ல் பாமக ஆட்சி உறுதி - அன்புமணி ராமதாஸ் சூளுரை

அன்புமணி ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss | பாமகவை பார்த்து எல்லோரும் பயப்படுவதால் தான் விமர்சனங்கள் வருவதாகவும், 2026ல் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றுவோம் என்றும் அம்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Madurai, India

மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் அக்கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2023-24 நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு தாமதமிக்கமல் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும், வைகை ஆற்றைக் பாதுகாக்க சிறப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் "திமுக கட்சி துவங்கி 18 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்தது. அதிமுக கட்சி துவங்கி 5 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். ஆனால், 1989ல் துவங்கப்பட்ட பாமக இன்னும் ஆட்சிக்கு வரவில்லை என்ற வருத்தம் உள்ளது. 2026ல் உறுதியாக பாமக ஆட்சிக்கு வரும். 55 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆட்சிகளால் மக்கள் சோர்ந்து விட்டார்கள். 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்த வேண்டும். 2026ல் பாமக வியூகம் வேறு மாதிரி இருக்கும். பாமக தலைமையில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்போம்" என்றார்.

இதனிடையே கூட்டத்தில் நிர்வாகி ஒருவர் அதிமுகவை தாக்கி பேச முயன்றார். அப்போது அவரை இடைமறித்த அன்புமணி ராமதாஸ்,"நம்மை பார்த்து எல்லோரும் பயப்பட ஆரம்பித்து விட்டார்கள். அதனால் தான் அதிகமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.விமர்சனங்கள் வருவது நல்லது தான். நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம்" என்றார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் பேசிய போது,  "புதுக்கோட்டை தீண்டாமை வன்கொடுமை விவகாரம் மிக தவறான செயல். காலம் மாறிக் கொண்டிருக்கிறது. அடித்தட்டு மக்கள் முன்னுக்கு வர வேண்டும். ஒரு காலத்தில் அடித்தட்டு மக்கள் ஒடுக்கப்பட்ட சூழல் இன்று மாறியுள்ளது. ஆனால், போதுமான வேகம் இல்லை. தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  யார் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருந்தாலும் அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாமக குறித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் குறித்த கேள்விக்கு, "ஜெயக்குமார் சொல்லும் கருத்துக்கு நான் விளக்கம் சொல்ல முடியாது. எடப்பாடி சொன்னால் பதில் சொல்வேன்" என்றார். 2024 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு,"தமிழகத்தில் பரபரப்பு அரசியல் ஒருபுறமும், பிரிவினை அரசியல் ஒருபுறமும் இருக்கின்றன. நாங்கள் நடுவில் நாகரீகமான அரசியல் செய்கிறோம். தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்னதாக கூட்டணி குறித்து அறிவிப்போம். ரஜினிகாந்த் மாதிரி எனக்கு என் வழி தனி வழி என்று ஸ்டைலாக சொல்ல தெரியாது. அவ்வளவு தான்" என்றார்.

தொடர்ந்து பேசியவர்,"தமிழக அரசு கடந்த 3 மாதத்தில் ரூ.53,000 கோடி கடன் வாங்கி உள்ளது. மொத்த கடன் 6,43,000 கோடியாக உள்ளது. இதற்காக வருடம் தோறும் 48,000 கோடி ரூபாய் வட்டி கட்டுகிறார்கள். 55 வருடமாக தமிழகத்தை ஆண்ட திராவிட ஆட்சி இன்னும் மது விற்பனையை நம்பி தான் ஆட்சி செய்வதாக சொல்கிறார்கள். இது தான்  திராவிட மாடலா?" என குற்றம் சாட்டினார்.

First published:

Tags: Anbumani ramadoss, Madurai, PMK