முகப்பு /செய்தி /மதுரை / தமிழ்நாட்டில் குரங்கு அம்மை ஆய்வகம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை ஆய்வகம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

மா. சுப்பிரமணியன்

மா. சுப்பிரமணியன்

Monkeypox : தமிழக முழுவதும் உள்ள விமான நிலையங்களில் குரங்கம்மை பரிசோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது என மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

 தமிழகத்தில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு பயணிகளிடம்  குரங்கம்மை தொடர்பான சோதனை நடத்திய பின்னரே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று மதுரை விமான நிலையத்தில் கூறிய மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழக எல்லைப் பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,  முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களும் குரங்கமை குறித்த ஆய்வு தொடர்ந்து செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

குரங்கமை குறித்த ஆய்வு: 

தொடர்ந்து பேசிய அவர், ‘ தமிழகத்தில் இருக்கிற சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் முதல் பாதிப்பு வந்த உடனேயே இங்கு அதற்கான ஆய்வு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. அன்று முதல் வெளிநாடுகளில் இருந்து வருகின்ற பயணிகளின் முகத்திலோ அல்லது முழங்கால்களுக்கு கீழேயோ ஏதேனும் கொப்புளங்கள் பாதிப்பு இருக்கிறதா? என்று தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் ஐ.சி.எம்.ஆர். விதிகளின்படி வெளிநாடுகளில் இருந்து வருகிற அத்தனை பயணிகளையும் மாஸ் ஃபீவர் ஸ்கிரீனிங் கேம்ப்ஸ் என்ற அடிப்படையில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில் ரேண்டமாக இரண்டு சதவீதம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. குரங்கம்மை பரவல் தற்போது உலகில் பல்வேறு நாடுகளில் பெருகி கொண்டு வருகிறது.

கடந்த வாரம் வரை 63 நாடுகளில் குரங்கம்மை நோய் பாதிப்பு இருந்த நிலை மாறி, தற்போது 72 நாடுகளுக்கு கூடுதலாக பரவி உள்ளது. உலகம் முழுவதும்  72 நாடுகளில் 14,533 பேருக்கு இந்த குரங்கமை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை கேரளா, டெல்லி, கொல்கத்தா போன்ற மாநிலங்களில் குரங்கம்மை பாதிப்பு என்பது கூடுதலாகி வருகிறது. எனவே தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் தொடர்ந்து கண்காணிப்பதும் கேரளா, ஆந்திர எல்லைகளில் அங்கிருந்து வருபவர்களை குரங்கம்மை பாதிப்பு ஏதும் இருக்கிறதா? என்பதை கண்டறிவதும் தொடர்ந்து எல்லைகளில் வருபவர்களை ஸ்டார்சுரேசன் பரிசோதனை செய்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மதுரை விமான நிலையத்தை பொருத்தவரை பயணிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினந்தோறும் இங்கு வரக்கூடிய 400க்கும்  மேற்பட்ட பயணிகளுக்கு தொடர்ந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது’ என்று கூறினார்.

மழைக்கால நோய்கள் குறித்து முன்னெச்சரிக்கை: 

அப்போது, தற்போது தமிழகத்தில் மழைக்கால நோய்கள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஒட்டு மொத்தமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மக்கள் நல்வாழ்வுத் துறையோடு ஒருங்கிணைந்து டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

வீடுகளில் அவசியம் இல்லாமல் தேங்குகிற மழை தண்ணீர் அப்புறப்படுத்துவது, கொசு உற்பத்தியாகாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துறை சார்பாக லார்வா நிலையில் உள்ள கொசுக்களை அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தடுப்பூசி:

தொடர்ந்து, சிறுவர்களுக்கான தடுப்பூசி எந்த நிலையில் உள்ளது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ஒவ்வொரு முறையும் தடுப்பூசி போடும்பணியை பொறுத்தவரை கடந்த   ஜனவரி முதல் குறிப்பிட்ட வயது அடைந்தவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி என்பது மத்திய அரசு எப்போது தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்களோ அப்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு

ஏற்கனவே 15 முதல் 17 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற நிலை மாறி தற்போது தமிழக முதல்வரின் ஆலோசனையை ஏற்று 75 நாட்கள் இலவசமாக பூஸ்டர் டோஸ்  தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி வைத்துள்ளோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். கடந்த ஞாயிறு நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 18 லட்சத்தி 8 ஆயிரம் பேர் ஒரே நாளில் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். அடுத்த மெகா தடுப்பூசி முகாம் வருகிற 7ஆம் தேதி தமிழக முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறும். குழந்தைகளுக்கான தடுப்பூசி என்பதை பொருத்தவரை மத்திய அரசு எப்போது அறிவிக்கிறதோ அப்போது போடப்படும் என கூறினார்.

குரங்குமை நோய்க்கு தடுப்பூசி எப்போது?

குரங்குமை நோய் பாதிப்பு ஏற்பட்டால் தடுப்பதற்கான சிகிச்சை மற்றும் தடுப்பு ஊசிகள் எப்போது தொடங்கப்படும் என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர், உலக சுகாதார மையம், இந்தியன் மெடிக்கல் கவுன்சில் போன்ற அமைப்புகள் இந்த நோய்க்கு எந்த மாதிரியான தீர்ப்பு அறிவிக்கிறார்களோ அப்போது மட்டுமே அது செய்யப்படும்.

Must Read : கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறை: விசிகவுக்கு எதிராக சதி - திருமாவளவன் கண்டனம்

தற்போது நாடு முழுவதிலும் ஆய்வகங்கள் 15 இடங்களில் அமைப்பதற்கு ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது. அப்படி ஆய்வகங்களை அமைக்கப்படுகிற போது, தமிழகத்தில் குறிப்பாக சென்னை கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் இருக்கிற ஆராய்ச்சி மையத்திலும் ஒரு ஆய்வகம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை நாம் கொடுத்திருக்கிறோம். இதை அவர்கள் ஏற்பாடு செய்வார்கள் என்று கருதுகிறோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கல்வி உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள் என்ற செய்தியாளர் கேள்விக்கு, அதை கால்நடைத்துறை அமைச்சரிடம்தான் கேட்க வேண்டும் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

செய்தியாளர் - சிவகுமார் தங்கையா.

First published:

Tags: Ma subramanian, Madurai, Monkeypox, Vaccine